கிர் ரென்றே சுற்றுகிறது!

அண்ணா… அண்ணா…
ஒத்த வயதென்றாலும்
பெயரின் முதற்பாதி முன்னே தள்ள
அண்ணா என்றே அழைப்பேன்…
கூடவே
மல…டாஆ… அண்ணா … மல…
கேலிக்காய்ச் சொல்வேனோ
ஊக்கத்தின் உந்துதலாய் உசுப்பேற்றிச் சொல்வேனோ…
புன்னகை மாறாது கை கொடுப்பாய்

பதவிகளின் தன்மை பக்கத்தில் வரவிடாத
முதற்கட்டத்தில்…
வலியவே வந்து
தோளில் கைபோட்டுச் சிரிப்பேன்…
குழந்தைத்தனமாய் இருக்கிறார் என்பாய்!

ஒரே அலுவலகம்
உடன் இருந்த சிவன்!
உன்னையும் என்னையும் இணைக்கும் பாலமாய்
ஒவ்வொரு கணமும் நகைச்சுவைப் பரிமாற்றம்
எல்லாம் ‘தமிழில் சிவன்’ கைங்கரியம்!

’பாரம்பரிய விகடன் அலுவலகத்தின்
பாரம்பரியத்தைக் காட்டும்
கடைசி நபர் நீதான்’ என்று
என்னைக் கேலி செய்வாயோ…
உள்ளபடி சொல்வாயோ…
உடனிருந்த சிவன் உரக்கச் சிரித்தார்!

திங்கள் பல கடந்த பின்னே
பேஸ்புக் திண்ணையில்
தாமதமாய் நலம் விசாரித்தேன்…

நலம் என உரைத்தாய் அன்று
நண்பா உன்
பலம் குன்றிப் போனாயே!
இன்றும்
நலம் விசாரிக்க நா எழுகிறது
ஆனால்…
நினைவுகளின் ரீங்காரம்
நிஜத்தில் கேட்பதில்லையே!

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
பாட்டின் சூட்டோடு
செல்பேசியில் பாடியும் காட்டினாய்!
உன் சுர்ருக்கும் விர்ருக்கும்
என் தலை கிர்ரென்று சுற்றியது!
இப்போது…
நீ சொல்லாமலே
உன் செய்தி சொன்னதால்…
என் தலை கிர் ரென்றே சுற்றுகிறது!