தமிழர்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது! நல்ல நூல்களை, இதழ்களை, ஆரோக்கியச் சிந்தனைகளை வளர்க்கும் பதிவுகளை படித்து, அறிவை வளர்த்துக் கொள்வதும் ஞானம் கூடப் பெறுதலும் அருகி வருகிறது. உலகியல், ஆன்மிக அறிவு மங்கி… அரசியல், மதத் துவேஷ வெறி மதி மயக்கத்தால் கூடப் பெற்று வருகிறது!
விளைவு- விலை கொடுக்க வேண்டிய நிலை!
மக்கள் இப்படி இருக்க, அரசு அதற்குச் சளைத்ததா என்ன?
நூலகங்களுக்கான இதழ்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டன.
இந்த நிதியாண்டில் இருந்து தமிழ் இதழ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது. 6 தமிழ் நாளிதழ்கள், 4 ஆங்கில செய்தித்தாள்கள், 12 வார மாத இதழ்கள் வாங்கும் நூலகங்களில் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாம்!
மேலும், கடந்த ஒன்றரை வருடங்களாகவே நூலகங்களுக்கு வழங்கப்பட்ட இதழ்களுக்கான தொகை, வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்களுக்கும் ஒரு வருட, ஒன்றரை வருட பாக்கி வைக்கப்பட்டிருப்பதும், காசு கமிஷன் கொடுத்து சரிக்கட்டினால் அப்படி இப்படி வளைந்து கொடுத்து காசோலையை வறண்டு போன பசுஞ் சோலையாய் கண்ணில் காட்டுவதும் எழுதப்படாத விதி ஆகியுள்ளது!
இதுதான் தமிழக அரசின் செயல்படாத லட்சணம்!
அதுபோல், நூல்கள் வாங்கப் பெறுவதும், நூல் பதிப்பாளர்களுக்கு பாக்கியைக் கொடுப்பதும் வெகுவாகக் குறைந்துள்ளதால், திண்டாட்டம் என்று சிலர் காதுபடவே சொல்கிறார்கள்!
அரசும் மக்களும் இவ்வளவு மோசமான மன நிலைக்குச் செல்வது, தமிழ்நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன என்று அன்று ஒருவர் சொன்னதன் இன்றைய கண்மேல் பலன் காட்சிகள்தான்~!
இதைச் சொன்னபோது, நண்பர்கள் சிலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
ஆனால், ”இது இன்று தோன்றிய நிலைமை அல்ல. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. பலன் இப்போது தெரிகிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருமுன் அரசு நூலகங்களில் பெரும்பாலும் அண்ணா, பாரதிதாசன், தி.மு.கல், தி.க. அனுதாபிகள் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள், நூல்களைத் திணித்தனர். மாணவர்களின் பாடத்திட்டத்தில் கூட் அவை திணிக்கப்பட்டன. நல்ல, தரமுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் புறக்கணிக்கப்பட்டன. அதே சமயத்தில்தான் தரம் கெட்ட வார இதழ்களும் வரத்துவங்கின. ஒரு காலத்தில் அற்புதமாக வந்து கொண்டிருந்த தினமணி, ஹிந்து பத்திக்கைகள் காலப்போக்கில் தரம் தாழ்ந்து போயின. ஆனந்த விகடனின் கதியும் இப்படியே. போதாக்குறைக்கு பாழாய்ப்போன டி.வி. சேனல்கள். காலை பத்து மணிக்கே சீரியல்களைத் துவங்கி விடுகின்றன. இதனால் குடும்பப் பெண்களுக்கிடையில் வார இதழ்கள் படிக்கும் வழக்கம் முற்றிலும் போயி விட்டது. ஒரு காலத்தில் கல்கியில் வெளிவரும் தொடர்களுக்காக ஆவலுடன் காத்திருப்போம். நூலகம் செல்லும் வழக்கம் குறைந்து போனதற்கு இப்போதுள்ள செல்போன், வாட்ஸ் அப், முக நூலகளும் காரணம். அதேபோல எழுத்தாளர்களிலும் தரமானவர்கள் குறைந்து விட்டார்கள்.” என்றார் நண்பர் கே.வி.சிவராமன்~!
”இதில் மற்றுமொரு விடுபட்ட விஷயமும் உள்ளது. பொதுக்காரணிகள் அடிப்படையிலான cartel கள் இயங்குவதும், அவற்றின் குழு உறுப்பினர்கள் எழுதிய சுமாரான புத்தகங்கள் கூட பொது நூலகங்களிலும், பல்கலைக்கழக/கல்லூரி நூலகங்கள் மீதும் வலிந்து திணிக்கப்படுவதும் வாடிக்கையாகிப் போன சோகமும் இங்கு தான் நிகழ்ந்துள்ளது.” என்றார் வெங்கட்ராமன் ஸ்ரீனிவாசன்!
எங்கே போகிறது தமிழகம்!?
டாஸ்மாக் ஒன்றே வெறியா? குடிப்பது ஒன்றே குறியா?



