காரைக்குடி கம்பன்கழகம் சார்பில் கம்பன் திருவிழா ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கம்பன் கழக செயலாளர் பழ. பழனியப்பன் செவ்வாய்க்கிழமை கூறியது: காரைக்குடி தாய்க்கம்பன் கழகத்தின் 79 ஆம் ஆண்டுக் கம்பன் திருவிழா ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. பேராசிரியர் தி. ராசகோபாலன் தலைமை வகிக்கிறார். பேராசிரியர் ந. விஜயசுந்தரி தொடக்க உரையாற்றுகிறார்.
இதில், மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் ப. பாண்டியராஜனுக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கப்படுகிறது. கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் எழுதிய மீனாட்சி- பழனியப்பா ஆய்வுச்சொற்பொழிவு நூலான “கம்பன் படைத்த கைகேயி‘ எனும் நூலை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வெளியிடுகிறார்.
ஏப்ரல் 8ஆம் தேதி மாலை எழுத்தாளர் பழ. கருப்பையா தனிப்பேருரையும், கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி மாலை சொற்பொழிவாளர் சுகி. சிவம் நடுவராகக் கொண்ட பட்டிமன்றம் நடை பெறுகிறது.
ஏப்ரல் 10ஆம் தேதி நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயில் என்று கூறப்படும் கம்பன் சமாதிக் கோயிலில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகிக்கிறார். திருச்சி இரா. மாது, தேவகோட்டை வி. யோகேஷ்குமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர். முடிவில் மு. பழனியப்பன் நன்றி கூறுகிறார்.
மேலும், இந்த ஆண்டு கம்பன் கழகம் கூட்டும் நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கம் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கோட்டையூர் வள்ளல் அழகப்பர் இல்லத்தில் நடைபெறுகிறது. விழாவை செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா தொடங்கிவைக்கிறார். ராசா மணி முத்துகணேசன் வாழ்த்திப் பேசுகிறார். திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் சிறப்புரையாற்றுகிறார். அழகப்பரின் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா சிங்கப்பூர் கவிஞர் அ.கி. வரதராஜன் எழுதிய அரிய மாமனிதர் அழகப்பர் என்ற கவிதை நூலை வெளியிட்டுப் பேசுகிறார்.
இவ்விழாவில் செட்டிநாட்டைச் சேர்ந்த இலக்கியங்கள், தமிழ் வளர்க்கின்ற நிறுவனங்கள் மடங்கள், கலைகள் என பல்வேறு தலைப்புகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாட்டிலிருந்தும் தமிழறிஞர்கள் ஆய்வேடுகள் வழங்குகின்றனர். நிறைவு விழாவுக்கு தஞ்சாவூர் இளவரசர் பாபாஜி ராஜாசாகிப் போன்ஸ்லே சத்ரபதி தலைமை வகிக்கிறார். கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம் நிறைவுரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருவதாக தெரிவித்தார்.



