இத்தை இங்கே பதிவிடுவதற்கே மனமில்லைதான்! ஆனால் பதிவிடாமலும் இருக்க முடியவில்லை! நான் பேஸ்புக்கில் ஏதாவது கனமான விஷயங்கள் பதிவு செய்தால், அதற்கு ஒற்றைச் சொல்லில் பதில் கருத்துப் பதிவிட்டுவிட்டு, கைபேசியில் அழைத்துவிடுவார்… அரை மணி நேரத்துக்கும் குறையாமல் ஒவ்வொரு முறையும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பார். என் கருத்து, அதற்கு அவர் தரும் விளக்கம் அல்லது புரிந்து கொண்ட விதம், உலகியல் நடப்பு, ஆன்மிக அணுகுமுறை என்று பலவாறாக இருக்கும்!
இருபத்தைந்து வருட நட்பு! விஜயபாரதம் இதழில் நான் இருந்த போது சிறுகதை கேட்டுத் தொடங்கிய தொடர்பு! இதழின் தன்மைக்கு ஏற்ப சிறுகதைகளை எழுதுவார். கதையின் ஓட்டமும் முடிவும் இதழின் நோக்கத்தையும் புரியவைத்திருக்கும். அதனால் அவரிடம் கதையின் கருத்தோட்டத்தைக் குறித்த மாற்றத்தைக் கோரி ஒருநாளும் போன் செய்ததில்லை! ஆனால், அவரது கையெழுத்து…! ரொம்பவே கடினம், புரிந்து கொள்வதற்கு! அசுர வேகத்தில் எழுதித் தள்ளியிருப்பதை அனுமானிக்க முடியும்! சில இடங்களில் எழுத்து கணிக்கவியலாததாக இருக்கும். போன் செய்து கேட்டால் தெளிவு கிடைக்கும். இப்படியே தொடர்புகள் நீண்டு, நான் கலைமகள் நிறுவனத்தில் மஞ்சரி இதழாசிரியராகப் பணியில் இருந்த போது, கீழாம்பூர் அவர்கள் இவரது கதையை என்னிடம் கொடுப்பார், சார் உங்களுக்கு தான் புரியும், இந்தாங்கோ… என்பார். அச்சுக் கோத்து வந்ததில், பிழை திருத்திக் கொடுப்பேன். இது அவரின் கையெழுத்தைப் படித்துக் கொள்ள நானே ஏற்படுத்திக் கொண்ட ஒருவிதப் பயிற்சி என்று நினைத்துக் கொள்வேன்!
அடிக்கடி அலுவலகப் பக்கம் வருவார். சந்திப்புகள் சுவாரஸ்யமானதாக இருக்கும். திருச்சி, நெல்லை, மதுரை, சென்னை என் வாழ்வின் நெருங்கிய நகரங்கள். அவற்றில் என் மதுரையின் மதுர அனுபவங்களைச் சொல்வேன். அலுக்காமல் கேட்பார். தன் அனுபவங்களைச் சொல்வார். அவரது வீட்டுக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். ஒரு முறை கீழாம்பூர் அழைத்துச் சென்றார். தினமணியில் இருந்த போது ஒரு முறை சென்றேன்.ஒரு முறை உடன் அமர்ந்து உணவு உண்டிருக்கிறேன். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் அழகிரியின் வீடு என்று கைகாட்டப்பட்டு செல்லும் வழியை அப்போது மனத்தில் உள்வாங்கிக் கொண்டேன்!
2005ல் கலைமகளும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய சிறுகதைப் பட்டறையின் போது ‘உருவகக் கதைகள்’ என்ற உத்தியைப் பற்றி உரையாற்றினேன். எழுத்தாளனின் கற்பனைத் திறனும் கருத்தோட்டமும் விலங்குகளை முன்னிட்டுக் கொண்டு எப்படியெல்லாம் கதையாக வெளிவந்திருக்கிறது என்ற என் வாசிப்பின் வெளிப்பாட்டை வெகுவாக ரசித்துக் கேட்டார். (இணைக்கப் பட்ட இந்தப் படத்தில் அவரது முகபாவமே அதைக் காட்டும்!) தான் அந்த உருவகத்தையே தனித்துவமாய்க் கொடுக்காமல் வெகுஜனக் கதைகளினூடே சேர்த்துக் கொடுப்பதைப் பற்றி தனிப்பட்ட உரையாடலில் உதாரணங்களுடன் சொன்னார். ரசித்தேன்.
2008ல் என் இளைய சகோதரி திருமண வரவேற்பு மதுரையில்! பத்திரிகை அனுப்பி விட்டு, போனில்தான் அழைத்தேன்! நேரில் சென்று அழைக்க அன்று போதில்லை! அப்போது நான் விகடனில் இருந்தேன். அழைப்பை ஏற்று வந்து, உடனிருந்து மணமக்களை வாழ்த்தி, உணவருந்தி, நட்பை கௌரவித்தார். (அப்போது எடுக்கப்பட்ட படம்தான் இங்கே பதிவிட்டிருப்பது)
வைணவத்தின் பேரில் அவருக்கு தனி கவனமும் பெரு விருப்பும் இருந்தது. ஆழ்வார் ஆசார்யப் பெருமக்கள், அரங்கன் கதை, ஏழுமலையான், கள்ளழகர் என்றெல்லாம் அவ்வப்போது போனில் கதைப்பார். தன் அமானுஷ்யக் கதைகளின் பின்னோட்டத்தை இவற்றினூடே புகுத்தித் தன் கற்பனையைச் சொல்லி, என் கருத்தையும் கேட்பார். சிலவற்றில், நான் மரபை மீற வேண்டாமே என்று மறுத்துரைப்பேன். அதற்கு தன்னாலான விளக்கம் கொடுப்பார். அப்படியான சத்சங்கமாகவே அந்தத் தொலையுணர் உரையாடல் தொடர்ந்திருக்கும்!
அந்தப் பாசத்தால் தானோ என்னவோ, நட்பையும் கடந்து ஒரு படி முன் வந்து, எனக்கான குடும்பத்தை அமைத்துத் தருவது என்ற எண்ணத்தில் எனக்காகப் பெண் பார்க்கும் படலத்திலும் தலை நீட்டினார், அவரின் குடும்ப உறவுகளில் தலைகாட்டி! ஆனால் என் தலையில் எழுதப் பட்டிருப்பதை, பாவம்… அவரால் படிக்க முடியவில்லை!
தொழில்நுட்ப உலகில் அப்டேட் ஆக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இணையத்தின் நுணுக்கங்களை விரித்துக் கேட்பார். சொல்வேன். என் இதழியல் அலுவலகப் பணிகளின் அழுத்தங்களை உணர்ந்தவராய் அன்யோன்யமாகப் பேசுவார். அதில் அன்பும் அக்கறையும் மிகுந்திருக்கும்! அது ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும் எழுத்தாளருக்குமான உறவுநிலைகளைக் கடந்து உள்ளார்ந்து சென்றிருக்கும். எத்தனையோ எழுத்தாளர்களை என் வாழ்வில் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்திரா சௌந்தர்ராஜன் என்ற இந்த எழுத்தாளனைப் போன்ற அன்யோன்ய ஆத்மாவை இதுவரை அடியேன் உணர்ந்திலேன்! செயலிழப்பில் சிக்கித் தவிக்கும் என் இதயத்தின் பலவீனத்தை அறிந்து எத்தனையோ ஆறுதலும் தேறுதலும் எனக்களித்தார்! தன் இதயத்துடிப்பின் குரலையும் அவர் சற்றே உள்ளார்ந்து கேட்டிருக்கலாம்! என்ன செய்வது..? மர்ம தேசங்கள் நம் வசம் இல்லையே!
செங்கோட்டை ஸ்ரீராம்