ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்

இந்த சைலன்ட் ஜோக், எனக்கு இரு விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது.
ஒன்று, இன்றைய ஸ்வச்ச பாரத் அபியான். தூய்மை இந்தியா திட்டம், இந்தப் படத்தில் காணும் வகையில்தான் பல இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை நகரே அதற்கு சாட்சி.
இரண்டு, இதை அனுப்பிய கீதா, விஜயகீதா, ஏழ்வரைக்கடியான் என்ற பெயர்களில் உலவிய ராமரத்னம் சாரின் ஒரு செயல்…

‘தி ஹிந்து’ அலுவலகத்தில் புகைப்பட ஆர்கிவ்ஸ் செக்‌ஷனில் பணிபுரிந்தவர் ராமரத்னம். கன்னடம், தெலுங்கு உள்ளிட்டவற்றில் பழக்கம் உண்டு. நான் மஞ்சரியில் பணிபுரிந்தபோது அமைந்த நல்ல நட்புக்களில் இவரும் ஒருவர். அழகாக தென்னாச்சார்ய சம்ப்ரதாயத்தை பளிச்செனக் காட்டும் திருமண் துலங்க வருவார். ஏழெட்டு வருடங்களுக்கு முன் ஒரு முறை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் ஒரு நாடகத்துக்கு வந்திருந்தார். உடன் அவருடைய மகள், உறவினர்களும் வந்திருந்தனர். என்னைப் பார்த்ததும் என்னுடன் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருடன் கொஞ்சம் சப்தமாகப் பேச வேண்டும்… சீராம் வாயேன்… கொஞ்சம் வெளில போவோம்னு அழைத்தார். இருவரும் வெளியில் வந்தோம். சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். தி ஹிந்துவில் போட்டோக்கள் வரிசைப் படுத்தி வைக்கும் முறை, கட்டுரைக்கு தக்க படத்தை எடுத்துக் கொடுக்க அவர் கையாளும் முறை… எல்லாம் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போது இன்டக்ஸிங் வெகு சுலபம். படங்களை நிகழ்வுகள் வாரியாக ஏ டூ இஸட் இன்டக்ஸ் செய்து, கீ வேர்ட் கொடுத்து டேடாபேஸில் சேமித்து, தேவைப்படும் விதத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால் கணினி வராத காலத்தில் எப்படி பெட்டிகளை அடுக்கி, அவற்றில் காலவரிசை, அகரவரிசைப் படி போட்டோக்கள் வைத்திருப்போம் என்ற பணி நுட்பத்தை சொல்லிக் கொண்டிருந்தார்….

கென்னடி தெரு முனையில் உள்ள பெட்டிக் கடையில் வெத்தலை பாக்கு பீடா வாங்கி வாயில் போட்டு விட்டு என் தோளைப் பற்றிய படி நடக்க முனைந்தார்… அதை மெல்லத் தொடங்குவதற்குள் என்ன ஆனதோ….  (கொஞ்சம் லோக்கல் மொழியில் செல்லமாகத் திட்டியபடி) வரா வரா… என்று சொல்லிக் கொண்டே… வாயில் போட்ட  பீடாவை அப்படியே உள்ளங்கைக்கு கொண்டு வந்து, கைகளைப் பின்னால் கட்டி மறைத்துக் கொண்டு… பேசத் தொடங்கினார்.

அப்போது அவரது மகள், உறவினர்கள் சிலர் எங்களைக் கடந்து போனார்கள். அவர்களிடம் நான் சீராமோட வரேன்… நீங்க போங்கோ… என்று சொல்லி விட்டு மெதுவாக நடந்து வந்தார். பின்னர் சொன்னார்… என்னை வெத்தலை போடக்கூடாதுன்னு பொண்ணு கண்காணிச்சிண்டிருப்பா .. பின்னாடியே வந்துடுவா…. என்று சொல்லி பீடாவையும் ‘தி ஹிந்து’ அலுவலகக் கதையையும் மென்றுகொண்டு வந்தார்.  (நிற்க…)

எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க.. இதைப் போயா பகிருந்து கொள்வது என்று இதைப்  படிக்கும் உங்களுக்கு தோன்றக் கூடும். இதை நான் சொல்லக் காரணம், ஒரு குடும்பத்தில் உள்ள முதியவரின் குழந்தைத்தனமான மனநிலையை ஒரு இளைஞனாக நான் கண்டுகொண்ட ஒரு சம்பவம் இது என்பதால்தான்! உடல் நலம் சார்ந்த பிரச்னைகளை முதியவர்கள் சந்திக்கும்போது, உணவு முறைகளில் நாம் கட்டுப்பாடுகளை விதிப்போம். அது நம் நல்லதுக்குத்தானே என்ற எண்ணம் அந்த நேரத்தில் ஒரு சிலருக்கு வராது. குழந்தைகள் ஐஸ்க்ரீம்க்கு அடம்பிடிப்பதுபோல்… யாருக்கும் தெரியாமல் வாங்கி சாப்பிட்டுவிட்டு… பின்னர் சளி, தொண்டைப் பிரச்னை என்று அவதிப்படுவதுபோல்தான்… ஆனால், நாம் அந்த முதியவர்களை அவர்களின் மனநிலையில் அனுக மறந்துவிடுகிறோம் என்று தோன்றும். இன்றும் என் தந்தையின் பொடி போடும் பழக்கத்தை என்னால் நிறுத்த முடியவில்லை. சட்டையில்தான் மூக்குப் பொடி எல்லாம் தன் வண்ணத்தைக் காட்டியிருக்கும்..! முதலில் சொல்லிப் பார்த்தேன். இப்போது அவர் போக்கில் விட்டுவிட்டேன்!

மீண்டும் ராமரத்னம் சார் கதைக்கு வருகிறேன்….
மஞ்சரிக்கு துணுக்குகள் அதிகம் அனுப்புவார். அவர் படித்த இதழ்களில் வரும் துணுக்குகள், சைலன்ட் ஜோக்ஸ், படங்கள், சார்ந்த செய்திகள், சிறு சிறு மொழிபெயர்ப்புகள், ஓரிரு முறை கதைகள் கூட அனுப்பியிருக்கிறார். ஏழ்வரைக்கடியான், விஜயகீதா, எம்.ஆர்.எம்., ராமரத்னம் உள்ளிட்ட பெயர்களில் அவற்றை அப்போது மஞ்சரியில் பிரசுரித்திருக்கிறேன். அவ்வாறு அவர் அனுப்பிய இந்தப் படம்…  அன்று அவர் வெத்தலையை உள்ளங்கைக்கு அனாயாசமாக வாயில் இருந்து எவருக்கும் தெரியாமல் சடாரெனக் கொண்டு வந்த அந்தக் குழந்தைத்தனமான செயலை நினைவுபடுத்திப் பார்க்க வைக்கும். வயதாகிவிட்டாலே குழந்தைத்தனம் குடிகொள்ளும் என்பதை அவரிடம் நான் முழுமையாகக் கண்டேன். அப்போது அவர் 70ஐக் கடந்துவிட்ட மனிதர். அவரை என் வண்டியில் அமரவைத்து ஓரிரு முறை ஆழ்வார்பேட்டை தி ஹிந்து பணியாளர்களுக்கான அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.

அவர் உடல் நலம் குன்றியிருந்தபோது,  நங்கநல்லூர் ஹிந்து காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு இரு முறை சென்றிருக்கிறேன். 2010க்குப் பின் அவரைப் போய்ப் பார்க்க நேரம் அமையவில்லை.

அவர் நம் நண்பர் புகைப்படக் கலைஞரும்,  இதழாளர் எழுத்தாளருமான க்ளிக் ரவி யின் சிற்றப்பா முறை உறவினரும் கூட. அவ்வகையில் க்ளிக் ரவி எங்கெல்லாம் தட்டுப் படுகிறாரோ… அவருடன் போனில் எப்போது பேச வாய்ப்பு வந்தாலும் அப்போதெல்லாம் … ராமரத்னம் சார் எப்படி இருக்கார் என்று நலம் விசாரிப்பேன். இரு வாரங்களுக்கு முன்னர் கிருஷ்ண கான சபா நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோதும், க்ளிக் ரவி சார்.. சித்தப்பா எப்படி இருக்கார் என்று நலம் விசாரித்தேன். அவர் பாவம் சார்.. படுத்த படுக்கையா இருக்கார். ரொம்ப கஷ்டமான நிலைதான் என்றார். அப்போதே ஒரு முறை சென்று நேரில் பார்த்து வர எண்ணம்… ஆனால் தள்ளிப்போடப்படும் வேலைகளால் இவ்வாறு சில நெகிழ்வான தருணங்களை வாழ்க்கையில் இழக்க நேரிடுகிறது.

காரணம் இன்று க்ளிக் ரவி அனுப்பியிருந்த குறுந்தகவல். ஏழ்வரைகடியான் – எம்.ராமரத்னம் காலமானார். இன்று 12 மணிக்கு இறுதிச் சடங்குகள் அவரது நங்கநல்லூர் இல்லத்தில் இருந்து என்று!

வேறு என்ன செய்வது? என் மன நிலையை இப்படித்தான் என்னால் வெளிப்படுத்த முடிகிறது!