“திருச்செந்தில் வேலா”

கவிதைகள்

tiruchendur murugan - 2026

(காவடிச் சிந்து)

வேல்முருகா என்றுசொல்லும் போது  – நல்

   வித்துடனே சேதிதரும் தூது – ஒரு

   சேவலுடை நற்கொடியை

   காவலுடன் தந்தவனைத்

   தேடு -மனத்

   தோடு.

 

பால்குடங்கள் ஏந்திவரும் வேளை – குகன்

   பாசத்தினால் மறக்கிறேன் நாளை – சுவைப்

   பானகமாய் வாய்மணக்க

   ஞானமொழி சொன்னவனைப் 

   பாடு- சுருதி

   யோடு.

 

மாலவனின் சோதரியாம் சக்தி – தன்

   மகனுக்காய்த் தந்தவேலே சக்தி – வீண்

   மாகவலை தீர்ப்பதற்கு

   மோகவலை வெல்வதற்கு

   மண்ணில் – இல்லை

   எண்ணில்.

 

ஆலமரம் போலவுண்டு வம்சம் – அதன்

   ஆணிவேரே வேலவனின் அம்சம் – அந்த

   அற்புதத்தின் தீப்பிழம்பைச்

   சொற்பிடித்து வாழ்த்திடத்தான்

   ஆசை – நப்

   பாசை .

 

– மீ.விசுவநாதன்

 

 (இன்று (07.06.2017) திருமுருகனுக்கு உகந்த  வைகாசி விசாகத் திருநாள்) 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.