
– அரங்க இரகுநாதன் –
நீர்மை நிறைந்திருக்கும் நீர்வண்ணன் தாளிணையில்
ஓர்மை நிலைத்திருக்க ஓதுவாய் …. சீர்மை
அறிதுயில் ஆயன் அடிபணிந் தேத்தும்
நெறியியல் வாழ்வே நிறை.
நண்ணும் மனமுடையீர் நாரண நம்பியை
எண்ணும் அளியருக்(கு) இதமளிப்பான் …. கண்ணின்
இமையாய்ப் புரந்திடுவான் இச்சைகள் தீர்ப்பான்
அடைவாய் அருள்வான் அணைத்து.
அணைத்தருள் ஆசில் அணிமா மலராள்
அணிசெய் அரவணையான் ஆசி … மணமார்த்
துளபமணி மார்பன் துலங்குநர சிங்கன்
களபமணம் வீசும் களம்
களமாய்க் கருணையின் காகுத்தன் நிற்க
வளமாய் விளையும் வரங்கள் …. உளமார்
திருமங்கை மன்னன் திளைத்துக் களித்த
கருமம்போம் காண்ட வனம்
காட்ட வனத்திறை கண்டுகொண்டார்க் கில்வையாம்
மீணடும் பிறப்பிந்த மேதினியில் … மாண்ட
இருடியரும் ஆழ்வார் குருவரரும் கண்ட
திருவடிகள் பற்றித் திளை
திளைக்கும் களிப்பில் திகட்டாக் கனியாய்
முளைத்துத் திருநீர் மலையில் ….வளைத்துக்
கிரிவலம் செய்யும் கிரிசையர் வாழ்வைச்
சரிவிலாது காக்கும் சரண்.
சரணடைவாய் சாந்தன் சரணங்கள் ஆசிக்
கிரணடைவாய் திண்ணம் கிளர்வாய் … மரணபயம்
நீக்கியே மாணளிக்கும் நீர்வண்ணன் தாளிணைத்
தேக்கி உளமிருத்தல் தேசு
தேசளிக்கும் தேவன் திருநீர் மலைமீது
மாசழித்து பக்தர் மகிழ்வளித்து …. வாசியற
ஆசிநல்கி முத்திக்(கு) அரணாய் நீர்வண்ணன்
பூசித்தல் நல்கும் புகழ்
தனிமாப் புகழ்த்தெய்வம் தண்மார் புறையும்
அணிமா மலர்மங்கை ஆர்ந்தே … அணிசெய்யும்
நீர்வண்ணன் சாந்தமாம் நீர்மையுடை ஆளரியும்
பார்விண்ணும் ஓர்ந்து படர்ந்தளந்த விக்கிரமன்
சீருண்ணும் நீர்மலையைச் சேர்
சேரிணை வேண்டிச் செழிப்பினை கேட்டிடச்
சீரினை நல்கிடும் சேயிழை … மார்பினில்
ஆட்சிசெய் அன்னை அணிமா மலர்மங்கை
மாட்சியருள் நீர்வண்ணன் மன்னு
நீர்வண்ணன் பூமங்கை நீல முகில்வண்ணன்
பார்விண் அவுணன் பணிதலையும் … பார்த்தளந்த
விக்கிரமன்; நீளுகிரால் விண்ணதிர வென்றபர
நற்கரும நாரணனை நண்ணு
திருநீர்மலை பெருமாள் தாயார் சன்னதியில் அடியேன் விண்ணப்பம் அந்தாதிப் படையல் …