ஏனோ தெரியவில்லை… இன்று காலை… துயில் கலைந்த வேளை … வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் – வார்த்தைதான் ரீங்காரமிட்டது. ஔவைப் பாட்டியின் அபிநயம். அழகுச் சொல்லால் விரல் பிடித்து ஆடிய நர்த்தனம். பெண்பாவைப் பருவம் மறுத்து வெண்பாவால் விளையாட்டாய்ச் சொன்ன மூதாட்டியின் மூதுரைதான் நெஞ்சில் அலையோடியது! கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியென எதுவோ எதையோ பார்த்து சூடு போட்ட கதையைக் காட்சிப் படுத்திய அந் நேரம்…. இன்னொன்றும் என் சிந்தையை பலமாய் உலுக்கியது! நாட்கள் நகர்கின்றன… வேகமாய்ச் சுற்றும் பூமி… அதே வேகத்தில் …. வயோதிகத்தின் அருகே வலியத்தான் அழைத்துச் செல்கிறது… மரணத்தின் அருகில் விரல் பிடித்து இழுத்துச் செல்கிறது… காலம் கடந்த வேளை…. திரும்பிப் பார்த்தால் – எல்லாம் வெறுமை! பிறர்க்குப் பயன் தரும் விதமாய்… அண்மைக் காலமாய்… என்னால் எதுவுமே அமையவில்லை! சிறகடித்துப் பறக்கும் நேரம் சிறகொடிந்து கிடக்கும் பாரம்… நெஞ்சை அழுத்துகிறது! ஔவைப் பாட்டி மேலும் கிளறிவிட்டாள்… இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவில் இனியவும் – இன்னாத நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு வறுமை வந்து எய்திய காலை இளமை இன்னாதது… கொடிது கொடிது இளமையில் வறுமை! வறுமை – இளமைப் பருவத்தே துன்பம் தருவது… இன்னா அளவெனில்… முதுமைப் பருவம்! அப்பருவத்தே இன்பம் தர வேண்டியனவும் துன்பமே தருமாம்! ஆம் ஔவையே! முதல்பாதியை நான் அனுபவித்து விட்டேன்… பின்னது நோக்கி வருங்காலம் அழைக்கிறது! பார்த்துவிடுகிறேன்! நாள் அல்லா நாள் பூத்த நல் மலர் போல்! தேவைக்குப் பயன்படும் சுப வேளை… மலர் தேடி அலையும் போது…. பூத்துச் சிரித்து, பூத்ததற்கேயான பயனைத் தராத மலரைப் போல் – ஆள் இல்லா மங்கைக்கு அழகு! பார்த்து ரசித்து… அன்பையும் அழகையும் அனுபவிக்க வேண்டிய கணவனிலா இளம்பெண் பெற்ற அழகைப் போல்! நான்!
பயன் தாராத பண்டம் போல் வாழ்க்கை!
Popular Categories



