
தாமிரபரணித் தாய்”
( கவிஞர் மீ.விசுவநாதன் )
காப்பு
ஆனை முகனி(ன்) அருளோடு தென்பொதிகை
ஆனை முனியாம் அகத்திய தேவனின்
செல்ல மகளாய்ப் பிறப்பெடுத்த நற்புகழாள்
நல்ல பொருநை நதி. (1)
நதியான தாமி ரபரணித் தாயை
கதியாகப் போற்றக் கவலை கரையும் ;
மதிநுட்பம் ஓங்கி வளர்கவிதை வாழ்த்த
விதிநுட்பம் வெற்றிதரும் வித்து. (2)
வித்து முளைத்து விரிவான் தொடவுயரும்
சத்து மிகக்கொண்ட தாமிர சக்தியால்
மொத்த உயிரினமும் முன்னேறி மேன்மைபெற
நித்தமும் ஊறிவரும் நீர். (3)
நீர்”பொருநை”ப் பேரோடு நீண்டநாள் வற்றாமல்
ஊர்செழிக்கப் பாய்ந்தே உயிர்ப்பாலாய் வேரிறங்க
ஆன்றோரும் சான்றோரும் ஆசார்ய யோகிகளும்
தோன்றிங்கே செய்கின்றார் தொண்டு. (4)
தொண்டு பலசெய்யத் தோள்வலியும், செல்வத்தைக்
கொண்டு குவிக்கும் குணவள்ளல் ஆள்பலமும்,
அண்டம் தினம்வணங்கும் ஆசார்ய உத்தமரும்
கண்ட பொருநைநதிக் கா.. (5)
காக்கு மெனநம்பி காடுவயல் எங்கெங்கும்
தேக்குடனே நெற்பயிரும் தேன்சொரியும் பூக்களுமாய்
ஆக்கிவைத்த அத்துணைக்கும் அன்னை “பொருநை”யவள்
நீக்கமற உள்ளாள் நிசம் . (6)
நிசமான தெய்வம் நிதம்காண வேண்டி
வசமான நல்வரத்தால் மக்கள் தசைநரம்புள்
தாமி ரபரணிநீர் தப்பாமல் பக்தியினால்
சாமி உணர்த்துகிற சத்து. (7)
சத்தை அனைவர்க்கும் தட்டாமல் தந்திடுவாள்
முத்தைக் கொடுப்பாள் ; முகமலர்ந்த சித்தனைப்போல்
பூங்குளத்தில் ஊற்றெடுத்துப் புன்னைக்கா ஊர்க்கடலில்
பாங்குடனே போய்க்கலப்பாள் பார். (8)
பார்த்தும் குளித்தும் பளிச்சென நீரணிந்து
கூர்த்தவிழி மூடிக் குவலயம் காக்கும்மா
தேவனை உள்ளுக்குள் தேடும் பணிசெய்வோர்
மாவினை தீர்க்கும் மருந்து. (9)
மருந்தின்றி வாழலாம் ; வற்றா பொருநை
அருந்தி வருவோர்க்கே அன்பு பெருகும் ;
விருந்தோம்பல் பண்பு விரியும்; இனிதாம்
கரும்புநீர் காணுமோ கல். (10)
“கல்யா ணபுரி” கலைமிகுந்த ஊரினுக்கு
எல்லாப் புகழுமே இப்பொருநை பல்லாண்டு
காலமாய்ப் பாய்ந்து கலந்திருப்ப தாலென்று
நாலுபேர் போற்றும் நதி. (11)
(தாமிரபரணி மகாபுஷ்கரத்திற்காக எழுதியது)



