ரோல் மாடலாகத் திகழும் மாமனிதர்கள்: ஜெகன்மோகன்- கடவுளின் மறுஉருவமாக கருதப்படக் கூடியவர்கள் மருத்துவர்கள். இந்தத் தொழிலைத் தன் உயிராகவும், உறவாகவும், உன்னதமாகவும் கடைசிவரை பாவிப்பவர்கள் அரிதே. அதில் ஒருவர்தான் டாக்டர் ஜெகன்மோகன்.மந்தைவெளியில் அவரது சந்திரா கிளினிக்.
டாக்டருக்கு படித்து முடித்ததுமே சேவை என்ற அஸ்திரத்தை கையிலெடுத்தார். இந்த அஸ்திரம்தான் அவரை இறுதிவரை கைப்பிடித்து அழைத்து சென்றது. ஆயிரக் கணக்கான மக்களை உயிர் பிழைக்கச் செய்தது. 1975-ல் புதிதாக ஆரம்பித்த தன் சந்திரா கிளினிக்கில் வரும் நோயாளிகளிடம் ஒரு ரூபாய் வாங்கி கொண்டுதான் சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். ஆனால் தன்னிடம் வேலைபார்க்கும், நர்ஸ சம்பளம், கரண்ட் பில் போன்றவை கட்டுவதற்கு நோயாளிகளிடம் வாங்கும் இந்த ஒரு ரூபாய் கட்டுப்படியாகவில்லை.
அதனால் 20 ரூபாய் வாங்க ஆரம்பித்தார். எப்போது இவர் 20 ரூபாய் வாங்க ஆரம்பித்தாரோ அது முதல் தன் நோயாளிகளிடம் ஒருபைசா கூட அதிகமாக வாங்கியது இல்லை. 20 ரூபாய் டாக்டர் என்ற பெயர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. குறைந்த கட்டணம், தரமான சிகிச்சை என்ற பெயர் டாக்டர் ஜெகன்மோகனுக்கு ரொம்ப சீக்கிரத்திலேயே ஒட்டிக் கொண்டது.
ஒருநாளைக்கு 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து குவிந்துகொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் 20 ரூபாய் கூட இல்லாதவர்களுக்கு இலவசமாகவே ஊசி போட்டு மருந்துடன் அனுப்பும் கருணை் உள்ளம் அவருக்கு (வயது 76). நேற்றிரவு டாக்டருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பின் உயிர் பிரிந்துள்ளது. சோகத்தில் மூழ்கியுள்ள அங்குள்ள மக்கள் தங்கள் கண்ணீரில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
‘தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்ற வாசகங்கள் சிலருக்கு இயற்கையிலிருந்தே… சிலருக்கு Eternalஆக ஒட்டிக் கொள்ளும். அந்த வெகு சிலரில் டாக்டர். ஜெகன்மோகனும் ஒருவர்.
நினைவஞ்சலிக் குறிப்பு: – கிருஷ்ணமூர்த்தி
மயிலாப்பூரில் புகழ்பெற்ற இருவது ரூவா ஏழைகளின் டாக்டர் ஜெகன்மோகனுக்கு ஒரு நினைவஞ்சலி!
சென்னை மந்தைவெளியில், 2 ரூபாய்க்கு தொடங்கி, அண்மை காலம் வரை, 20 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்து வந்த, டாக்டர் ஜெகன்மோகன் காலமானர். இவரது மருத்துவம், சேவை என்பதை உணர்த்தும் விதமாக, பல இடங்களிலிருந்து, மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாவூரை சொந்த ஊராக கொண்ட டாக்டர் ஜெகன்மோகன், தமது சிறுவயதில், பெற்றோருடன் சென்னைக்கு வந்தார்.. பள்ளி படிப்பை தொடர்ந்து, தனது கல்லூரி படிப்பை, பச்சையப்பன் கல்லூரியில், பிஎஸ்சி படித்தார்.. பிஎஸ்சி முடித்த கையோடு, மும்பையில், பிரபல மருந்து விற்பனை கம்பெனியொன்றில் இணந்து, 1960ஆம் ஆண்டுகளிலேயே, 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்றார்.
தனது நேர்மையை அதிகாரிகள் சந்தேகித்ததால், வேலையை தூக்கியெறிந்துவிட்டு, சென்னை திரும்பிய டாக்டர் ஜெகன்மோகன், பேரறிஞர் அண்ணாவை சந்தித்து மருத்துவம் படிக்க இடம் கோரினார்…பேரறிஞர் அண்ணா இடம் ஒதுக்கீடு செய்து தர, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து, படித்து முடித்து மருத்துவரானார்…
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மறைந்த திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களிடத்தில் நேரடி அறிமுகம் இருந்தாலும், மிக மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவையை வழங்குவதையே குறிக்கோளாக கொண்டிருந்தார்…
இதன்படி, தனது மனைவி சந்திரா பெயரில் 1975ஆம் ஆண்டு சென்னை மந்தைவெளியில், தனது இல்லத்திலேயே, கிளினிக் தொடங்கிய டாக்டர் ஜெகன்மோகன், வெறும் 2 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கத் தொடங்கினார்….
மருத்துவத்தை முழுக்க முழுக்க சமூக சேவையாகவே பாவித்த டாக்டர் ஜெகன்மோகன், காலங்கள் பல கடந்து போன போதிலும், அவரது கட்டணம் நத்தை வேகத்திலேயே உயர்ந்தது… 2 ரூபாயில் தொடங்கிய அவரது மருத்துவ சேவை, 43 ஆண்டுகளுக்கு பிறகு உயர்ந்தது என்னவோ, 20 ரூபாயாக மட்டும் தான்….
கண் பார்வை பாதித்து பின் அதிலிருந்து மீண்ட டாக்டர் ஜெகன்மோகன், தன்னிடம் வரும் நோயாளிகளிடம் தாம் பெற்ற மிக மிக சொற்ப கட்டணங்களை, தனது உதவியாளர்களின் ஊதியத்திற்கும், மருத்துவ உபகரண செலவுகளுக்கும் மட்டுமே பயன்படுத்தி வந்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை வரையில் வைத்தியம் பார்த்து வந்த 20 ரூபாய் டாக்டர் ஜெகன்மோகன், உடல்நலம் குன்றியதால், அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நன்றாக பேசிக் கொண்டிருந்த நிலையில் அக்.3 புதன்கிழமை காலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனைகளை தாண்டி, மருத்துவத்தை சேவையாக கருதி அவற்றை வழங்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருக்கிறது…. தொடாமலேயே மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் நிறைந்த இவ்வுலகில், முறைப்படி நாடிபிடித்து பார்த்து, நோய் குறித்த மிகவும் எளிய நடையில் விளக்கி மருத்துவம் பார்த்த, 20 ரூபாய் டாக்டர் ஜெகன்மோகன், காலம் உள்ளவரை அனைவரது நினைவிலும் இருப்பார்….




