காருணீக பித்ரு
– மீ.விசுவநாதன் –
“பள்ளிக் கூடம் விட்டு மதியம்சாப்பாட்டுக்கு சைக்கிள்ள வந்த ஒரு அம்பி மேல லாரி ஏறி புள்ள அதே எடத்துல செத்துப் போச்சைய்யா…எலக்ஷனுக்குப் போட்டிருந்த பந்தக் கம்புல இடிச்சு அந்தப் புள்ள லாரிக்குப் பின் டயர்ல மாட்டி இழுத்துக்கிட்டே வந்து எங்க கடை வாசலுக்கு நேரா ரெண்டு கையையும் ரோட்டுல அடிச்சுக் கிட்டே ரத்த வெள்ளத்துல செத்துப் போனத இந்தக் கண்ணால பாக்கற பாவியாப் போய்ட்டேன்யா”
அந்தக் கடை முதலாளி தனது கடையின் வாசலில் கூடிஇருந்த கூட்டத்தினரிடம் அழுத படியே புலம்பிக் கொண்டிருந்தார்.
நானும் சுந்தரமும் நெருங்கிய நண்பர்கள். சமவயதினர். ஏழாம் வகுப்புமுதல் எனக்கு அவன் வகுப்புத் தோழன். நான் படிப்பில் சுமார்ரகம். அவன் புத்திசாலி. நான் விளையாட்டில் நாட்டம் கொண்ட கொஞ்சம் முரட்டுப் பையன்.அவன் அமைதியானவன். விளையாட்டை விட படிப்பிலும், குடும்பப் பாசத்திலும் நாட்டம் கொண்டவன்.
அவன் எங்கள் தெருவிற்குப் பக்கத்துத் தெருவில்தான் குடியிருந்தான். அவனுக்கு ஒருஅண்ணன், தம்பி, தங்கை உண்டு. அப்பா அரசாங்க உத்தியோகம் பார்த்து வந்தார். அவர்ஒவ்வொரு நாளும் என்னுடைய வீட்டைக் கடந்து அலுவலகம் செல்வதைப் பார்த்திருக்கிறேன். மடித்துக் கட்டிய வேட்டி, கட்டம் போட்ட அரைக்கைச் சட்டை, கையில் ஒரு குடை, சிறியபையுடன் அமைதியாக நடந்து செல்வார்.
சாந்தமான முகம். அவரைப் போலவே சுந்தரமும் இருப்பான். குண்டாக மிக அழகாக பெயருக்குத் தகுந்தாற் போல சுந்தரமாக இருப்பான். அவனுடைய அம்மாஎப்பொழுதாவது கடைக்குச் செல்லும் வழியில் என் அம்மாவுடன் பேசிக் கொண்டிருப்பாள். அப்பொழுதெல்லாம்சுந்தரத்தின் குணங்களை வியந்து பெருமையாக அவனுடைய அம்மாவிடம் சொல்லி மகிழ்ச்சி கொள்வாள்.
சுந்தரம் காய்கறிகள் வாங்க சைக்கிளில் கடைக்குச் சென்று திரும்பும் பொழுதெல்லாம் என் அம்மா வாசலில் நின்று கொண்டிருந்தால் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து அம்மாவுடன் பேசிக் கொண்டிருப்பான். ஒரு முறை “சுந்தரம்… எங்க கண்ணனுக்கு கணக்கும்,இங்கிலீஷும் சொல்லி கொடு…அவன் படிக்காம ஊரச் சுத்திண்டிருகான்” என்றாள் என்அம்மா. ” அதெல்லாம் இல்லை மாமி அவனும் நன்னாப் படிப்பான்…அவனுக்கு நான் சொல்லித்தரேன்”என்றான்.
அப்பொழுதும் நான் எங்கள் வீட்டு வாசல் திண்ணையில் தனியாகக் கோலி விளையாடிக் கொண்டிருந்தேன். ” சுந்தரம் நீயும் வா” என்றேன். வந்து சிலநிமிடங்கள் விளையாடி விட்டு,” டேய்..கண்ணா…நேரம் ஆச்சு..அம்மா காத்திண்டிருப்பா..”என்று புறப்பட்டான்.
எங்கள் தெருவில் புலவர் கீரனின் கம்பராமாயணம் சொற்பொழிவு பத்து நாட்கள் நடந்தது. அந்த நாட்களில் அவன் எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கதை கேட்பான். கதை முடிந்ததும் அதைப் பற்றி எனக்கு விளக்கிச் சொல்லுவான். தமிழில் எனக்கு ஆர்வம் அதிகம்.
அவனுக்கு அனைத்திலும் ஈடுபாடு இருந்தது. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளும் குணம் இல்லாமல் அடக்கமாக இருப்பான். அதனால்தான் அவனை என் அம்மாவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒன்பது,பத்து, பதினொன்றாம் வகுப்புகளின் அவனும், நானும் அனேகமாக பக்கத்தில்தான் அமர்ந்திருப்போம். பல சமயங்களில் ஒரு பக்கம் சுப்பாமணி இன்னொரு பக்கம் சுந்தரம் என்று அமர்ந்திருப்பேன்.
ஆங்கிலம் கற்றுத்தரும் என்.வி.எஸ். சார், தமிழாசிரியர் நீலகண்டையர், கணக்காசிரியர் ஏ.வி.கே. போன்ற ஆசிரியர்களுக் கெல்லாம் சுந்தரத்தை மிகவும் பிடிக்கும். தனது அமைதியினாலும், கற்கும் திறமையினாலும் அவர்களை அவன் கவர்ந்திருந்தான்.
ஒருநாள் விளையாட்டுத் துறை ஆசிரியர் பொன்னையா சார் எங்களை கபடி விளையாடச் சொன்னார். ஆறும் ஆறும் பன்னிரெண்டு பேர்களை இரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாட அவர் கவனித்துக்கொண்டிருந்தார்.
“கபடிக் கபடிக் கபடி” என்று பாடிக்கொண்டே சற்று ஒல்லியாக இருக்கும் “ஹரி” வரவும் சுந்தரம் அவனை அப்படியே அலக்காகத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு விட்டான். “ஹரி”விடுடா..விடுடா என்று மன்றாடியும் விடாத சுந்தரத்திடம் ,” சுந்தர்…அவனவிட்டுடு…அவன் அவுட்” என்றார் பொன்னையா சார். அவன் பிடியில் இருந்துவிடுபட்ட ஹரி ,” என்ன பிடிடா இது…உடும்புப் பிடி…மூச்சே நின்னுருமோன்னு பயந்துட்டேன்” என்றான். எனக்கு இன்றும் அது நினைவிருக்கிறது. சுந்தரத்திற்கு அதுபடிப்பானாலும், நட்பானாலும் உடும்புப்பிடிதான்.
அவன் கொஞ்சம் குட்டையாக இருப்பான். அதனால் அவன்கால் விரல்களால்தான் சைக்கிள் பெடல்களைத் தள்ளி அழுத்தி ஓட்டிச் செல்வான். தனக்குப் பின் சீட்டில் யாரையும் உட்கார அனுமதிக்க மாட்டான்.
அப்படி யாரேனும் அமர்ந்து விட்டால் உடனேயே சைக்கிளில் இருந்து குதித்து விடுவான். பல நேரங்களில் சைக்கிளைத் தள்ளிய படியே நண்பருடன் பேசிக் கொண்டு வருவான். காரணம் பின்சீட்டில் அமர வைத்து ஓட்டு வதற்குப்பயம்.
பல வருடங்களுக்குப் பிறகு அவனது பெற்றோர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சுந்தரத்திற்கு அந்தத் தங்கையிடம் மிகுந்த பாசம். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அந்தத் தங்கையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பான். அந்தக் கைக்குழந்தையின் துணிகளை எடுத்துக் கொண்டு வாய்க்கால் படித்துறையில் துவைத்து நீரில் அலசிப் பிழிந்து எடுத்துத் தன் தோள்களில் போட்டுக்கொண்டு அந்த அலுமினிய வாளியில் வீட்டுக்காகத் தண்ணீர் எடுத்து வருவான். அம்மாவிற்குஉதவியாக இருக்கும் அவனைப் பார்த்துப் பலர் மெச்சுவதுண்டு. அதில் ஒருவர்தான் லிங்கம் பிரதர்ஸ் லாரி டிரைவர்.
அவன் குடியிருந்த தெருவில்தான் ஒரு பிரபலமான அப்பளக்கடை இருந்தது. ஒவ்வொரு நாளும் ” லிங்கம் பிரதர்ஸ் லாரி”யில் வெளியூர்களுக்கு அப்பளம் ஏற்றிச் செல்வது வழக்கம். அந்த லாரி சுந்தரத்தின் வீட்டு முன்புதான் நின்று கொண்டிருக்கும். அந்த வயதான டிரைவர் சுந்தத்தின் தங்கையைத் தன் லாரி சீட்டில் அமர்த்தி விளையாடிப் பொழுதைக் களிப்பார். சுந்தரத்தை “அம்பி அம்பி” என்று அன்போடு அவனின் தக்காளிக் கன்னங்களைத்தட்டி மகிழ்வார்.
அந்த வருடம் பதினோராவது வகுப்புக் கானப் பயிற்சித் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அன்று சனிக்கிழமை. காலை வேளையில் ஆங்கிலமுதல் தாள் பரீட்ச்சை முடிந்தது. மாலையில் இரண்டாம் தாள் எழுத வேண்டும். உணவு இடைவேளையில் வீட்டிற்க்குச் சென்று சாப்பிட்டுவர சைக்கிளில் புறப்பட்டான் சுந்தரம். சைக்கிள் நிறுத்தும் இடத்திற்குப் பக்கத்துப் புல்வெளியில் நானும் நண்பர்களும் எங்கள் தூக்குச் சட்டிகளைத் திறந்து சாப்பிடத் துவங்கினோம்.
” சுந்தரம் இந்தா ஒருவாய்..” என்று நான் கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தை எடுத்து அவன் வாயில்திணித்தேன். “டேய்..போறும்டா கண்ணா போறும்டா…ஆத்துல போய் சாப்பிடணும்”என்று வாயைத் துடைத்துக் கொண்டு இடது காலால் சைக்கிள் பெடலை அழுத்திய படி ஒரு குதி குதித்து ஏறி அமர்ந்து கொண்டு வீடு நோக்கிச் சென்றான் சுந்தரம்.
கருகரு தலைமுடியை மேல்நோக்கி வாரியும், அகன்ற நெற்றியில் ஒரு சிறு விபூதிக் கீற்றும், பச்சை வண்ணத்தில் டிராயரும், வெள்ளைச் சட்டையும், நீல நிற ஹவாய்ச் செருப்புமாகப் பயணம் புறப்பட்ட சுந்தரத்தை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். பள்ளிக் கூட வாசல் திரும்பி, காந்தாரி அம்மன் கோவில் வளைவுச் சாலையில் அவன் போவதை பள்ளியின் வாசற்
கதவின் இடுக்கு வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் மறைந்து போய்விட்டான்.
ஒருவாய் தயிர்சாதம் எடுத்து நான் வாயில் போடும்வேளையில் நண்பன் லக்ஷம் ஓடியே வந்து ,” டேய்…எல்லோரும் வாங்கடா…நம்மசுந்தரம் லாரில அடிபட்டுச் செத்துப் போயிட்டான்… இன்னிக்கு மத்தியானம் பரீக்ஷை கிடையாது” என்று அலறிக்கொண்டு அழுதான். ஊரே அழுதது.
“லிங்கம் பிரதர்ஸ்” லாரிக்குஅடியில் கிடந்த சுந்தரத்தை வாரித் திரட்டிக் கொண்டு சென்றார்கள் போலீஸ்.
அப்பாதான் அம்பாசமுத்திரம் ஆஸ்பத்திரிக்குப் போனார். அங்கிருந்து நேராகத் தாமிரபரணி ஆற்றங்கரை மயானத்தில் அவனை நெருப்பு தேவனுக்கு சுந்தரந்தின் அப்பா சமர்ப்பணம் செய்தார்.
“சுந்தரம் சர்மணாம், வசுரூபம் அஸ்மது மம சஹா ஸ்வதாநமஸ் தர்பயாமி (மூன்று முறை அர்க்கியம்)”