
மோடி வந்து சென்றார்.. மாமல்லபுரத்தில் கொட்டித் தீர்க்கிறது கன மழை!
பிரதமர் நரேந்திர மோடி வந்து சென்ற மகாபலிபுரம் பகுதியில் கனமழை பெய்தது. அப்பகுதியில் 4.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதற்கு ஏற்ப காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் கனமழை பெய்துவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை பெய்து வந்தது. இரவு முழுவதும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது! நேற்று அதிகாலை வரை லேசான சாரல் மழை பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காலை வரையிலான கணக்கெடுப்பில் மாமல்லபுரத்தில் அதிகபட்சமாக 4.5 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. காஞ்சிபுரத்தில் 2.9, கேளம்பாக்கத்தில் 2.8, திருக்கழுக்குன்றத்தில் 2.1 என மழை பதிவானது. காஞ்சி மாவட்டத்தில் சராசரியாக 1.4 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

பொதுவாக வடகிழக்கு பருவ மழையின் போது காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பொழிவு இருக்கும். இருப்பினும் வடகிழக்குப் பருவமழை தொடக்கமே இந்த முறை கனமழையுடன் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது..



