திருவாரூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: கருணாநிதி வலியுறுத்தல்

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை விருந்தினர் மாளிகை கட்டட கட்டுமானப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார், அதில், இந்தச் சம்பவத்தின் உயிரிழந்த 5 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பிலும், அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய மாநில அரசுகள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வீதமும், காயமடைந்தவர்களுக்கு அவர்களின் பாதிப்புக்கு உகந்தவாறும் உடனடியாக நிவாரணமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.