
நேற்று சமூக ஊடகங்களிலும் பிரதான செய்தி ஊடகங்களிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பிய செய்தியாக, தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் அவமரியாதை செய்துள்ள தகவல் அமைந்திருந்தது. இதை அடுத்து, அந்தச் சிலைக்கு பாதுகாப்பு அளித்த போலீஸார், தொடர்ந்து தாங்களே அதை சுத்தம் செய்து, சரி செய்தனர்.
இதற்குக் காரணமாகக் கூறப் படுவது, பாஜக., இரு தினங்களுக்கு முன்னர் காவி உடையுடன் திருவள்ளுவர் உருவத்தைப் பதிவு செய்து போட்ட ஒரு டிவிட்தான்!
முன்னதாக, தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை அங்கே வெளியிட்டார். அப்போது, திருக்குறள் பா ஒன்றை தமிழில் மேற்கோள் காட்டிப் பேசினார்.
திருக்குறளுக்கும் தமிழுக்கும் பிரதமர் மோடி கொடுத்து வரும் முக்கியத்துவத்தையும், மதிப்பையும் கொண்டாடும் வகையில் தமிழக பாஜக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுர் படத்தை காவி உடையுடன் வெளியிட்டது.
இந்த ஒரு படம், தமிழகத்தில் பலரது கவனத்தையும் கவர்ந்தது. பலரும் தமிழக பாஜக திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூச முற்படுவதாக குற்றம் சாட்டினர். தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக., தலைவருமான மு.க.ஸ்டாலின் பதில் கொடுத்து ஒரு டிவிட் பதிவு செய்தார்.

இதை அடுத்தே, தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மர்ம நபர்கள் சிலரால் நேற்று அவமதிக்கப்பட்டது. 3 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையின் மீது ஆள்நடமாட்டமில்லாத நேரத்தில் சிலர் சாணியைக் கரைத்து ஊற்றியுள்ளனர். தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடனடியாக சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மர்மநபர்களால் அவமரியாதை செய்யப் பட்ட அந்த திருவள்ளுர் சிலைக்கு, இன்று பாஜக சார்பாக பாலபிஷேகம் செய்யப் பட்டது.
இன்று காலை அந்தப் பகுதிக்கு வந்த பாஜக.,வினர் திருவள்ளுவர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து மாலை அணிவித்து வழிபட்டனர்.



