
திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்று சொல்கிறார். எனவே அவர் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பதை ஏற்கவில்லை. அதாவது சனாதன வர்ணாஸ்ரம வைதிக தர்மத்தை அவர் ஏற்கவில்லை என்று சொல்லியே வள்ளுவரை இந்துத்துவத்துக்கு அப்பாற்பட்டவராகச் சொல்கிறார்கள்.
இந்தக் கூற்று மூன்று வகைகளில் பிழையானது.
முதலாவது வள்ளுவர் வேறு பல குறள்களில் குடி பெருமை தொடங்கி கர்ம வினை வரை இந்து மத மதிப்பீடுகளை முழுக்க முழுக்க அடியொற்றியே தன் இலக்கியத்தைப் படைத்திருக்கிறார். தர்ம, அர்த்த, காம மோட்ச என்ற சனாதன லட்சியங்களுக்கான நல்லுரையைத்தான் அறம், பொருள், இன்பம் என்று வகுத்துக் கொடுத்திருக்கிறார்.
இரண்டாவதாக, இந்தக் குறளைவிட பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்பதே பிறப்பு சாரா பார்வையை அழுத்தமாக முன்வைக்கும் குறள். ஆனால், அதற்கு இணையாக குண கர்ம விபாசக தொடங்கி ஏராளமான வரிகள் வேதங்கள் தொடங்கி கீதைவரையிலும் உண்டு.
வள்ளுவர் எந்த அளவுக்கு வர்ணத்துக்கு அப்பாற்பட்டவரோ அந்த அளவுக்கு வேதங்களும் சனாதன தர்மமும் அப்பாற்பட்டுத்தான் சிந்தித்திருக்கின்றன. அது இன்னும் ஒருபடி மேலே போய் வர்ணங்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றே போதிக்கிறது.
இந்து தர்மம் எந்த அளவுக்கு பிறப்புக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறதோ அதே அளவுக்கு இன்னும் சொல்லப்போனால் அதையும்விட அதிகமாகவே வள்ளுவரும் உயர் குடிப் பெருமையைப் போற்றிப் பேசவும் செய்திருக்கிறார்.
நற்குடியில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா. இதன் அர்த்தம் என்ன?
ஒருவனது குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், அவனது சுற்றத்தையும் ஆராய்ந்து அறிந்து அவனோடு நட்புச் செய்தல் வேண்டும்.
அன்பான குணமும், உயர்ந்த குடிப்பிறப்பும், மன்னன் விரும்பும் சிறந்த பண்பும் கொண்டிருப்பதே தூது சொல்பவனின் தகுதிகளாகும்
-போன்ற குறள்களில் நட்புக்கும் வேலைக்கு ஆள் எடுக்கவும் கூட என்ன குடி என்று பார்க்கவேண்டும் என்கிறார். பிறப்பு சார்ந்து ஒருவரை மதிப்பிடும் பார்வைதானே இது.
மூன்றாவதாக, இன்றைய இந்துத்துவ அரசியலும் சொந்த ஜாதிப் பற்று பிற ஜாதி நட்பு என்று சொல்வதன் மூலமும் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்று சொல்வதன் மூலமும் அதே உயர்ந்த கொள்கைகளையே முன்வைத்துச் செயல்படுகிறது.
அம்பேத்கர், காந்தி தொடங்கி பலரும் வியந்து சொன்ன ஒரு விஷயம் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் ஆர்.எஸ்.எஸ். முழுக் கட்டமைப்பில் ஜாதி சார்ந்த ஒடுக்குதல் துளிகூட இல்லை என்பதுதான். இன்றும் அது அப்படியே இந்து ஒற்றுமையையே தன் இலக்காகக் கொண்டே செயல்பட்டுவருகிறது.
இத்தனை ஆண்டு கால வரலாற்றில் ஆர்.எஸ்.எஸில் ஜாதி பார்த்து நடத்தியதாக ஒரே ஒரு குற்றச்சாட்டுகூட யாராலும் வைக்க முடிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் அனைத்து அமைப்புகளுக்குள்ளும் ஊடுருவி அதை அழிக்கும் வேலைகளைச் செய்யும் மாபெரும் அழிவு சக்திகள் இடைவிடாது களமாடிக்கொண்டுதான் இருக்கின்றன.
புனித நூல்களுக்கிடையிலான மோதலானது வேதங்களுக்கும் (கீதைக்கும்) திருக்குறளுக்கும் இடையில் நடக்கக்கூடாது. இரண்டுமே ஒரே உன்னத அறங்களை, லட்சியங்களை போதிப்பவையே. வேதங்களும் திருக்குறளும் கை கோர்த்துக்கொண்டு பைபிளையும் குர்ரானையும் எதிர்கொள்ளவேண்டும். அந்த அரசியல் பார்வை இந்துத்துவத்துக்குத் தெளிவாக இருப்பதால்தான் அது மங்கலான நிலையில் இருக்கும் தமிழகத்தில் கூட அதைக் கட்டம் கட்டித் தாக்கும் போக்கு இருந்துவருகிறது.
எனவே வேத, சனாதன தர்மத்தை ஆதரிப்பவர்களும் திருக்குறளை மதிப்பவர்களும் இந்துத்துவர்களும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியது பைபிள், குர்ரான், தாஸ் கேப்பிடல் புத்திரர்களையே.
சரியாகச் சொல்வதானால் இந்த அடையாளங்கள் அனைத்தையும் வைத்து அம்மானை ஆடும் கார்ப்பரேட் சக்திகளையே எதிர்க்க வேண்டும்.
நடைமுறை அரசியல் சார்ந்து நாம் யாரை எதிர்த்தாலும் ஆதரித்தாலும் கோட்பாட்டு ரீதியாக இந்தத் தெளிவு நமக்கு இருக்கவேண்டும்.
- பி.ஆர்.மகாதேவன் (எழுத்தாளர், பத்திரிகையாளர்)




Pirapokkum ella uirukkum katturai munnurai ti mudivurai
Pirapokkum ella uirukkum katturai