
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை, தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார்.
மதுரையில், உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. அன்னை மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரை என்றே பெயர் உண்டு மதுரை மாநகரத்துக்கு!

மீனாட்சி அம்மனின் ஆலயம், பாண்டிய மன்னர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. கலை நுணுக்கங்களுடன் கலைக் கடலாக உலக அளவில் புகழ்பெற்றுள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மேலும் ஓர் அடையாளத்தைத் தரும் முயற்சியை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தரப்பு மேற்கொண்டது.
திருப்பதிக்கு லட்டு பிரசாதம் அடையாளமாகிப் போனது போல், தமிழகத்தில் எந்தக் கோயிலிலும் லட்டு பிரசாதம் அடையாளமாகவில்லை என்பதால், மதுரைக் கோயிலுக்கு அந்தச் சிறப்பைக் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்கள்.

மதுரை கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து, சொக்கநாதரான சுந்தரேஸ்வரரையும், மீனாட்சி அம்மனையும் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தக் கோயிலுக்கு வரும் அன்பர்களுக்கு தினசரி இலவசமாக லட்டு பிரசாதம் வழங்குவது குறித்து தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதன்படி இந்த வருடம் தீபாவளி நாள் முதலே லட்டு பிரசாத விநியோகம் செய்வது குறித்து யோசிக்கப் பட்டது. ஆனால், அப்போது லட்டு தயாரிப்பு, கட்டமைப்பு தீபாவளி முதல், லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கட்டமைப்பு வசதிகள் முடிவடையாமல் இருந்ததால், திட்டமிட்ட படி வழங்கவில்லை. ஆனால், அது அப்போது, தக்காருக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்னை என்று கூறப் பட்டது.

இந்த நிலையில், தற்போது லட்டு தயாரிக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகள் முழுமையடைந்துள்ளதாகக் கூறப் படுகிறது.
இதையடுத்து, முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை இன்று காணொளி காட்சி மூலம், மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு பிரசாத விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
எனவே இன்று முதல், மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு வரும் பக்தர்களுக்கு கூடல்குமாரர் சந்நிதி முன்னர் லட்டு பிரசாதம் வழங்கப்படும்.



