
தமிழகத்தில் தலைவருக்கான வெற்றிடம் இருக்கிறது அதை ரஜினி நிரப்புவார் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும் மு.கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி!
நடிகர் ரஜினி காந்த் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இன்னமும் இருக்கிறது என்றார்.
கருணாநிதி, ஜெயலலிதா என பெரிய தலைகள் எல்லாம் மறைந்த பின்னர், அந்த இடத்தை நிரப்ப சரியான தலைமை தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை என்று பலரும் தெரிவித்த கருத்தை அடியொற்றி, ரஜினியும் அவ்வாறே கூறினார். ஆனால், இதற்கு அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர், தலைமைக்கான வெற்றிடத்தை முதல்வர் இபிஎஸ் நிரப்பிவிட்டார் என்றனர்.
அதே போல், தங்கள் பங்குக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் அந்த வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றார். இப்படி வெற்றிடங்கள் நிரப்பப் படுவது இரு தரப்பாலும் தொடர்ந்து கூறப் பட்டு வந்த நிலையில், வெற்றிடம் குறித்த கருத்து மட்டும் தமிழகத்தில் நின்ற பாடில்லை. அவரவர் தங்களுக்குத் தோன்றிய படி எல்லாம் வெற்றிட நிரப்பல் குறித்து கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வந்திருந்த மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “ரஜினி கூறியது போல் தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மை தான். ரஜினி வருவார், அந்த வெற்றிடத்தை நிரப்புவார்” என்றார்!
மு.க.அழகிரி ஏற்கெனவே நடிகர் ரஜினியின் நண்பர்தான். முன்னதாக இதே போன்று ரஜினி கட்சி குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். ஆயினும், கருணாநிதியின் மகனான அழகிரி, கருணாநிதியை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று கூறி வந்தார். காரணம், திமுக.,வின் தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபோது, அவரது கருத்து இவ்வாறு இருந்ததுதான்!
இந்நிலையில், தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று கூறி, அழகிரி திமுக.,வுக்கு வழக்கம் போல் கடுக்காய் கொடுத்துள்ளார். இந்த நிலையில், எந்தக் கட்சியிலும் இல்லாமல் அரசியல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் அழகிரி, ரஜினி கட்சி ஆரம்பித்த உடன் அதில் போய் சேருவார் என்று பதிலுக்கு கருத்துகளை அவிழ்த்து விடத் தொடங்கியுள்ளனர்.