
மு.க.ஸ்டாலினுக்கே இப்போது தலைவர் உதயநிதிதான் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை, மூலக்கொத்தளத்தில் தனியார் அமைப்பு சார்பில் இன்று (டிச.21) 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் முயற்சி, அண்ணா பெயரை அகற்றுவதற்காக என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாரே?
குறுகிய சிந்தனை கொண்டவர்களின் மனதில்தான் இத்தகைய எண்ணம் ஏற்படும். அண்ணாவின் புகழை நேற்று, இன்று, நாளை என்றைக்குமே கட்டிக் காக்கும் இயக்கம் அதிமுக. தன் கட்சியின் கொடியிலேயே அண்ணாவைப் பதித்தவர் எம்ஜிஆர்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மூவரின் எண்ணங்களில்தான் அதிமுக நடை போடுகிறது. ஆனால், திமுக அண்ணாவையும் பெரியாரையும் மறந்துவிட்டது. அந்தத் தலைவர்களையெல்லாம் ஸ்டாலின் மறந்துவிட்டார்.
அவருடைய மனதில் இருப்பவரெல்லாம் அவரின் அருமைப் புதல்வன் உதயநிதிதான். இப்போது ஸ்டாலினுக்கே தலைவர் உதயநிதிதான். அண்ணா தலைவர் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவருடைய அப்பா கருணாநிதியே தலைவர் கிடையாது. அவருடைய கவலையெல்லாம் உதயநிதி மீதுதான்.
அண்ணா எங்களுடன் இருக்கின்றார். அவருடைய பெயர் நிலைத்து நிற்கும் வகையில்தான் அதிமுக ஆட்சி இருக்கும்.
இது திசை திருப்பும் முயற்சி. திமுகவின் முகத்தில் கரியைப் பூசும் விதத்தில்தான் அதிமுகவின் முயற்சி இருக்கும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ளதே?
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. மேற்கொண்டு அதில் கருத்து சொல்ல முடியாது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்திருக்கிறது. குடிமகனாவதற்கு வழக்கமான ஆதாரங்கள் இருந்தாலே போதும் என கூறியிருக்கிறது.
தமிழ்நாடு அமைதி நிலவும் மாநிலம். இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பாபர் மசூதி பிரச்சினையின்போது பல மாநிலங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டன.
தமிழகத்தில் ஒன்றும் நடக்கவில்லை. இங்கு முஸ்லிம், கிறிஸ்தவர் என எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
மத நல்லிணக்கத்துக்கு இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு தமிழ்நாடு. இது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் விஷ விதையை விதைப்பதற்காக சதிகள் நடைபெறுகின்றன.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.