
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு அறிவித்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மிக மிக கொடியது.
இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, கட்சிகளை சாராத ஜனநாயக சக்திகள் சார்பிலும் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது.
சென்னையில் நாளை (அதாவது இன்று) எழுத்தாளர்கள், கலைஞர்கள், கட்சி சார்பற்றவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கே எதிரான சட்டம்.
இந்த சட்டத்தை திரும்ப பெறுகிறவரை அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையான ஒன்று.
அறவழியில் எங்கு போராட்டம் நடந்தாலும் அதில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்று ஆதரவை தெரிவிக்கும்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை திசை திருப்புவதற்காக சிலர் வேண்டும் என்றே கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற கருத்துகளால் போராட்டத்தை எந்த வகையிலும் திசை திருப்ப முடியாது.
முஸ்லீம்களை கொச்சைப்படுத்துவதும், அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.



