
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக தனது ரசிகர்களைச் சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வருகை குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சிப்பது குறித்து நேற்று பேச்சினூடே குறிப்பிட்டார். அப்போது அவர், ‘ஏன் இவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்கள்?’ என்று பேசினார். இந்தப் பேச்சு தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், சென்னை அம்பத்தூரில் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ரஜினியின் உருவ பொம்மையை சிலர் எரித்தனர். ‘ரஜினிகாந்த் உடனடியாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால், ரஜினியின் வீடு முற்றுகையிடப்படும்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



