
சென்னை:
மக்களை கடுமையாக வாட்டி வதைத்த அக்னி நட்சத்திர வெய்யில் இன்று முடிவுக்கு வருகிறது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உணரப் பட்டது. கடந்த டிசம்பரில் தாக்கிய புயலால் மரங்கள் பல சாய்ந்ததில், காற்றுக்கும் பஞ்சம் வந்தது. வெப்பநிலையும் அதிகம் உணரப் பட்டது. கடும் வறட்சியின் காரணமாக பொதுமக்கள் குடிநீருக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இம்மாதம் 4ஆம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திர வெய்யில் பெரும்பாலான இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் சென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் அதிகப்படியாக 110.48 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சென்னையை அடுத்த திருத்தணியில் 114 டிகிரிக்கும் சென்றது. இந்நிலையில் தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என்று அவர் தெரிவித்தார்.



