“காஞ்சி பெரியவரும் காந்திஜியும்….”
( பாலக்காடு அருகிலுள்ள நெல்லிசேரி கிராமத்தில்) (மாலை ஐந்தரை மணி ஆகிவிட்டது.
காந்திஜி மாலை ஆறு மணிக்கு மேல் எதையும் சாப்பிட மாட்டார். ராஜாஜியின் மனம்
பரபரத்தது. வெளியே காத்திருந்த ராஜாஜி உள்ளே சென்று காந்திஜியிடம், அவரது
சாப்பாட்டு நேரத்தை நினைவுபடுத்தினார். ‘இனி எனக்கு உணவு தேவையில்லை.
பெரியவரின் சொல்லமுதத்தை செவி வழியே உண்டு பசியாறி விட்டேன்,” என பரவசத்துடன்
கூறினார்.)
மே 27,2017-தினமலர்-திருப்பூர் கிருஷ்ணன்.
1927ல் தென் இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்தார் காந்திஜி. பெரியவரைப் பற்றிக்
கேள்விப்பட்டிருந்த காந்திஜி, அவரைத் தரிசிக்க எண்ணினார். அப்போது பெரியவர்
பாலக்காடு அருகிலுள்ள நெல்லிசேரி கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அங்கு
ராஜாஜியுடன் காந்திஜி சென்றார். அங்கிருந்த ஒரு மாட்டுக் கொட்டகையில் பெரியவர்
அமர்ந்திருந்தார். அவர்கள் தனித்து உரையாடினர். ராஜாஜி கொட்டகையின் வெளியே
காத்திருந்தார்.
பெரியவருடனான சந்திப்பு காந்திஜிக்கு ஒரு தனித்த அனுபவமாக அமைந்தது.
ஆதிசங்கரரின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த புகழ்மிக்க துறவி எளிமையே வடிவாக,
மாட்டுக்கொட்டகை தரையில் அமர்ந்திருந்தது காந்திஜியைக் கவர்ந்தது. எளிமை தானே
காந்திஜியின் உபதேசங்களில் தலையாயது.
சில நிமிடங்கள் காந்திஜியையே அருள்பொங்கப் பார்த்த பெரியவர், சமஸ்கிருதத்தில்
உரையாடினார். காந்திஜி அவரிடம், ”என்னால் சமஸ்கிருதத்தைப் புரிந்து கொள்ள
முடியும், ஆனால் உரையாடுமளவு தேர்ச்சி இல்லை. நான் உங்களுடன் இந்தியில்
பேசுகிறேன். நீங்கள் சமஸ்கிருதத்திலேயே பேசலாம்,” என்றார்.
பெரியவர் புன்முறுவல் பூத்தவாறே சமஸ்கிருதத்தில் கேள்விகளைக் கேட்டார்.
காந்திஜி பவ்வியமாக இந்தியில் பதிலளித்தார். அதுபோன்றே காந்திஜியின் இந்திக்
கேள்விகளில் பொதிந்திருந்த சந்தேகங்களுக்குப் பெரியவர் சமஸ்கிருதத்தில்
பதிலளித்தார்.
ஒரு மணிநேரம் அந்த சந்திப்பு நடந்தது. அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது
யாருக்கும் தெரியாது. அது தனிப்பட்ட சந்திப்பு என்பதால் பத்திரிகையாளர்கள்
யாரும் வரவில்லை. அவர்கள் பேச்சு எங்கும் பதிவாகவில்லை.
மாலை ஐந்தரை மணி ஆகிவிட்டது. காந்திஜி மாலை ஆறு மணிக்கு மேல் எதையும் சாப்பிட
மாட்டார். ராஜாஜியின் மனம் பரபரத்தது. வெளியே காத்திருந்த ராஜாஜி உள்ளே சென்று
காந்திஜியிடம், அவரது சாப்பாட்டு நேரத்தை நினைவுபடுத்தினார். ‘இனி எனக்கு உணவு
தேவையில்லை. பெரியவரின் சொல்லமுதத்தை செவி வழியே உண்டு பசியாறி விட்டேன்,” என
பரவசத்துடன் கூறினார்.
பெரியவரிடம், காந்திஜி விடைபெற்ற போது ஓர் ஆரஞ்சுப் பழத்தைக் கொடுத்து
ஆசீர்வதித்தார். ‘பழங்களிலேயே ஆரஞ்சு தனக்கு மிகவும் பிடித்தது’ என்று கூறி
காந்திஜி அதைப் பக்தியுடன் பெற்றுக் கொண்டார்.
காந்திஜி மறைந்த பிறகு, 1968ல் சென்னைப் பல்கலைக்கழகம் ‘காந்தியச்
சிந்தனைகளின் இன்றைய தேவை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தி மலர்
வெளியிட்டது. மலருக்காக பெரியவரிடம் வாழ்த்துச் செய்தி கேட்கப்பட்டது.
அந்த செய்தியில், ‘தன்னை யாரேனும் கொல்ல முயன்றாலும், தன்னைக் கொல்பவர் மீதும்
அன்பு செலுத்தும் மனம் தனக்கு அமைய பிரார்த்திக்கிறேன்,’ என்று காந்திஜி
தன்னிடம் கூறியதாக பெரியவர் குறிப்பிட்டிருந்தார்.




