
சென்னை:
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் கேன்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் 18% விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் பல இடங்களில் கேன் குடிநீர் விலை அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகத் திகழ்வது குடிநீர் கேன்களே. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு போனதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், கேன் தண்ணீருக்கு சென்னை மக்கள் அடிமையாகி விட்டனர். இந்நிலையில் குடிநீர்கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது.
குடிநீர் கேன் உற்பத்தி மீது 18% வரி ஜிஎஸ்டியில் போடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தனியார் கேன் உற்பத்தியாளர் சங்கங்கள் நேற்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஏற்கெனவே ஸ்டாக் வைத்திருந்த தண்ணீர் கேன்களே பொதுமக்களுக்கு விநியோகிக்கப் படுகிறது. அதுவும், ரூ.100க்கு மேல் விற்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 370 தண்ணீர் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவை மூலம் தினந்தோறும் 10 லட்சம் கேன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த வேலை நிறுத்தத்தால், 200க்கும் மேற்பட்ட கேன் நிறுவனங்கள், தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளதால், தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த குடிநீர் கேன்கள், இன்று காலை ரூ.80 முதல் ரூ.100 என விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.



