இரண்டாவது நாளாக … ஊரடங்கால் முடங்கிய மதுரை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai second day
மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும், மதுரை கோமதிபுரம் ஆறாவது மெயின் சாலை.

முழு ஊரடங்கால் இரண்டாவது நாளாக மதுரை முடங்கியுள்ளது. நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கால், மதுரை மாநகரில் இரண்டாவது நாளாக மக்கள் நடமாட்டம் இன்றி வீடுகளுக்குள் முடங்கினர்.

மதுரை கருப்பாயூரணி, சிலைமான், விரகனூர், தெப்பக்குளம், கோமதிபுரம், வண்டியூர், சிம்மக்கல், கோரிப்பாளையம், கோச்சடை, பழங்காநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை முதலே சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மதுரை நகரில் புறப்பகுதிகளான கோமதிபுரம், மேலமடை, கருப்பாயூரணி, புதூர், சர்வேயர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை காய்கறிகள் வண்டிகள், சைக்கிளில் பால் விற்பனை செய்பவர்களை மட்டும் போலீஸார் அனுமதித்தனர். சில்லறை மற்றும் பெரிய அங்காடிகளையும், பெட்டிக்கடைகளையும், இதர கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. பல தெருக்களில் திறந்திருந்த சிறிய காய்கறிக் கடைகளை போலீஸார் எச்சரித்து மூட வைத்தனர்.

madurai second day1
கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், மதுரை ஜூப்பிலி டவுனுக்கு செல்லும் சாலை.

புகை பிடிப்போர், புகைக்க கடைகளை தேடி அலைந்ததை காணமுடிந்தது. கோமதிபுரம், மேலமடை பகுதிகளில் மாநகராட்சி சார்பில் இயங்கும் நடமாடும் காய்கறி வண்டிகளும் வரவில்லை.

மதுரை நகரில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப் பட்டது. அதே நேரம் மதுரை புறநகர் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி, தேனூர், தென்கரை, முள்ளிப்பள்ளம், குருவித்துறை, சிறுவாலை, அம்பலத்தடி, மணியஞ்சி, குமாரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தாக்கம் குறைவால் சிறிய மற்றும் பெட்டிக்கடைகள் அதிகாலை மட்டும் செயல்பட்டன.

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை, மேலூர், திருமங்கலம், கீழமாத்தூர், பரவை, விளாங்குடி, ஏழுமலை தவிர பல கிராமங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கிராமங்களில் அதிகம் பேர் சுய கட்டுப்பாட்டை கடைப் பிடிப்பதால், இந்த நோயின் தாக்கம் குறைவாக இருக்கக் காரணம் என்கின்றனர். மதுரை நகரில் வெளியே செல்பவர்கள் எவராக இருந்தாலும் முக கவசம் இல்லாமல் சென்றால் கடும்நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

  • செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.