
நாங்குநேரி: வானமாமலை மடத்தின் சார்பாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ 3 லட்சம் – நயினார் நாகேந்திரனிடம் ஜீயர் வழங்கினார்!
நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி வானமாமலை மடத்தின் ஜீயர் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 லட்சத்துக்கான வரைவோலையை பாஜக., தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரனிடம் வழங்கினார்.
நாங்குநேரி ஸ்ரீவானமாமலை பெருமாள் கோயிலின் ஜீயர் மடத்தின் 31வது ஜீயராக, மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் திகழ்கிறார். இவர், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ 3 லட்சம் வரைவோலையாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் வழங்கினார். அவர் ஐ.ஓ.பி., வங்கி மூலமாக பிரதமர் நிவாரண நிதிக்கு அதனை அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து மடத்தின் சார்பாக நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு தலா 10 கிலோ அரிசி, முக கவசம், கிருமி நாசினி மருந்து ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனை பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதில் நாங்குநேரி டவுன் பஞ் செயலர் நம்பி, மடத்தின் மேனேஜர் தெய்வநாயகம் மற்றும் மடத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திசையன்விளையை சேர்ந்த சுதா செய்திருந்தார்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்குவதற்கு வசதியாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கொக்கிரகுளத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 15 அறைகள் கொண்ட தங்கும் விடுதியில் கட்டணம் எதுவும் இல்லாமல் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்!