
சென்னையில், பெண் மருத்துவரைக் காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்ததுடன், அவரது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வழக்கில், காசி என்ற இன்ஜினீயர் சுஜி, குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை மூன்று நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதில் அவர் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பெண்களைக் காதல்வலையில் வீழ்த்தி, நெருக்கமாக புகைப்படம் எடுத்து மிரட்டியது தெரியவந்துள்ளது.
சுஜியால் ஏமாற்றப்பட்ட பெண்கள் இப்போது புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர். சுஜி மீது ஒரு கந்துவட்டி வழக்கு, பெண்களை ஏமாற்றிய வழக்கு உட்பட ஐந்து வழக்குகள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. சுஜியிடம் நடத்திய விசாரணையில், அவரது இந்த மோசடிக்கு மேலும் சிலர் உதவி செய்தது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இணையதளங்களில் பெண்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய இரண்டு நண்பர்கள் உதவி செய்தது தெரியவந்துள்ளது. அதில் முக்கிய நபரான நாகர்கோவிலைச் சேர்ந்த டேசன் ஜினோ (19) என்பவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “காசி என்ற சுஜி-யின் நண்பர்கள் சிலர், லொக்கேஷன் ஷேரிங் மூலம் இணைப்பில் இருந்துள்ளனர். அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களின் லொக்கேஷன் மற்ற நண்பர்களுக்குத் தெரியும் அளவுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
சுஜி ஜிம்முக்கு போகும்போது, கோவையில் படிக்கும் பெண் ஒருவரும் ஜிம்முக்கு சென்றுள்ளார். அதில் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டிருக்கிறது. நாகர்கோவிலைச் சேர்ந்த அந்தப் பெண் கோவை சென்றபோது, சுஜியும் கோவையில் இருப்பதாக லொக்கேஷன் காட்டியிருக்கிறது. இதேபோன்று, லொக்கேஷன் ஷேரிங்கில் இருந்த நண்பர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்.
போலீஸ் காவலில் உள்ள சுஜியிடம் அவர் ஏமாற்றிய சென்னைப் பெண்கள் குறித்த விவரங்களை சேகரித்துவருகிறோம். சென்னை மருத்துவரின் புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்ட டேசன் ஜினோவைக் கைது செய்திருக்கிறோம்.

சுஜியால் ஏமாற்றப்படும் பெண்களுக்கு அவனைப் பற்றிய உண்மைகள் தெரிய வரும்போது விலகத் தொடங்குவார்கள். அப்போது, சுஜியின் ஃபேஸ்புக் நட்பு வட்டத்திலிருந்து விலகிவிடுவார்கள். அப்போது, அந்த பெண்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை டேசன் ஜினோவுக்கு அனுப்புவார் சுஜி. டேசன் ஜினோ, அந்தப் புகைப்படத்தை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்புவார்.
அந்தப் பெண், உடனே டேசன் ஜினோவைத் தொடர்புகொண்டு, இந்தப் படங்கள் உனக்கு எப்படி கிடைத்தது எனப் பதறியபடி கேட்பார். அதற்கு, சுஜி சொல்வதுபோன்று கேட்காமல் இருந்தால், உனக்கு தனியாக அனுப்பிய இந்தப் படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் அனைவரும் பார்க்கும்படி போட்டுவிடுவேன் என மிரட்டுவார். இப்படி பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளனர்” என்றார். சுஜி, அவனது நண்பர்கள் சிலரின் காதலிகளையும் தனது வலையில் வீழ்த்தியதாகவும் புகார் கிளம்பியுள்ளது. அதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.