
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கும் நேரத்தில் தமிழக அளவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சுற்றுலா பேருந்தும், தண்ணீர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், மாணவர்கள் கொரனோ தொடர்பாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால் வீடு திரும்ப முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கேரளா மாநிலம் கோட்டயத்தை சார்ந்த 25 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்து, அதற்கான ஈ-பாஸ் வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். சுற்றுலா பேருந்து கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் அருகே ராம் நகர் பிரிவு அருகே வந்த போது சாலையை கடக்க முயன்ற தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு வாகனமும் சாலையோரத்தில் மோதி நின்றது. இதனால் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த 24 பயணிகளையும், ஓட்டுநரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பயணம் செய்தவர்கள் அனைவரும் கேரள மாநிலம் கோட்டயத்தை சார்ந்தவர்கள் என்று கூறப்படுக்கிறது. கரூர் மாவட்டத்தில் கொரனோ ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு நடந்த முதல் சாலை விபத்து இது.