
சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை பரிசோதனை செய்வதற்கான 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா சிக்கியுள்ளதால் நாளுக்கு நாள் பாதித்தோர் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.
குறிப்பாக கொரோனா வைரஸின் கூடாரமாக அமைந்துள்ள தமிழகம், நாட்டிலேயே பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 3ம் இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பரிசோதனைகள் மிகவும் ஆமை வேகத்தில் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
போதுமான பரிசோதனை கருவிகள் இல்லாததால் சோதனை முடிவுகள் தாமதமாகிறது. கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்ய பி.சி.ஆர். ( பாலிமரேஸ் செயின் ரியாக்சன்) சோதனை நடத்தப்படுகிறது.
இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு தொற்று உள்ளதா என்று கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த சோதனை முடிவை அறிய 48 மணி நேரம் ஆகும். இந்நிலையில், பரிசோதனையை விரைவுபடுத்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை பரிசோதனை செய்வதற்கான 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரூ.5.48 கோடி மதிப்பில் மொத்தமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 9 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன.
நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களின் சிறப்புகள்
நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் மூலம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளியின் அளவை கண்டறிய முடியும்.
கொரோனா நோய் தொற்று அறிகுறி இல்லாமல் உள்ளவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்படும்.
2 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் தெரிந்துவிடும் வகையில் நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்று தலைமைச் செயலகத்தில், ரூ.5.48 கோடி மதிப்பில் நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட் -ஆல் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய "நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவிகள் பொருந்தப்பட்ட 14 வானங்கள்" சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தேன். #COVID #TNGovt pic.twitter.com/xotbUXD1UP
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 11, 2020