நெல்லை மாநகர் பகுதிகளில் கொரோனா தடை உத்தரவு காலத்தில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் நெல்லையப்பர் திருக்கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் தினமும் காலையில் ஒலிக்கும் தேவார திருவாசக ஆன்மீக பாடல்கள் ஒலிபரப்ப காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் திடீரென தடை விதித்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு மதத்தினர் வழிபாட்டுத் தலங்களில் மட்டும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்ப அனுமதி வழங்கப்படும் நிலையில், இந்து ஆலயங்களில், அதுவும் அரசின் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆலயங்களில், பக்தர்களின் மனம் புண்படும் வகையில் இவ்வாறு ஒலிபரப்பு நிறுத்தப் பட்டது நெல்லை வாழ் அன்பர்களிடம் பெரும் மன வேதனையை அளித்தது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் நெல்லை மாநகர காவல்துறையின் மதரீதியான இந்த பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்தும், பிற மத வழிபாட்டுத் தலங்களை போல் இந்து ஆலயங்களில் பக்தி இசையினை ஒளிபரப்ப அனுமதி வழங்க வலியுறுத்தியும், நெல்லை டவுன் நெல்லையப்பர் திருக்கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜசெல்வம் மற்றும் *நமச்சிவாயம் ஆகியோர் உரிய சமூக இடைவெளி விட்டு நான்குபேர் நேற்று சட்டப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் உட்பட நான்கு பேரும் கைது செய்யப்பட்டு டவுன் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டனர்.
இந்நிலையில், இந்துமுன்னணியின் நேற்றைய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும், மீண்டும் இன்று காலை நெல்லையப்பர் கோவிலில் பாடல்கள் ஒலித்தன என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கா.குற்றாலநாதன்.