
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, மக்கள் தங்களை பாதுகாப்பாக எப்படி வைத்துக்கொள்வது, அதற்கான வழிமுறைகளை என்னென்ன என்பது குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
அந்த வகையில் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திய பிறகு, கைகளை நன்றாக கழுவ வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதுக்குறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது, “சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகளை மூலம் கொரொனா தொற்று கிருமி பரவும் என்பதற்கான ஆதாரம் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் நாம் அனைவரும் முன்கூட்டியே கவனமாக இருப்பது நல்லது. மேலும் சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகளில் ஒருவரின் சுவாச துகள்கள் படிந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம், எனவே அதை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் சென்னை மாநகராட்சி மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா நோய்த்தொற்றுப் பகுதிகளில் பணியாற்ற 2,500 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது.
அதாவது இந்தக் குழுவில் ஒரு திட்டத் தலைவர் , திட்டப் பணி மேலாளர் தகவல் மேலாளர் கள மேற்பார்வையாளர் மற்றும் களப் பணியாளர்கள் எனப் பிரிக்கப்பட்டு பணிகள் கண்காணிக்கப்படும்.
இந்த குழு ஒவ்வொரு பகுதியிலும் அடிப்படைத் தேவைகளான உணவு, மளிகைப் பொருட்கள், குடிநீர், பொதுக் கழிப்பிடம் போன்ற இடங்களில் கூட்டம் கூடாமல் இருக்கவும், சமூக இடைவெளி குறித்தும் பொதுமக்களிடையே அறிவுறுத்துவார்கள். கொரோனா பாதிப்பு உள்ளவரைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவார்கள்.