
வறண்டுபோன வைகை நதியில் சாக்கடை நீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நீர் கரைபுரண்டு ஓடிய வைகை நதியில் சாக்கடை நீர் சங்கமிக்கும் அவலநிலை தொடர்கிறது.
கங்கையை புனரமைத்தது இந்திய அரசு. இதனால் கங்கையிலே சுத்தமான நீர் ஓடுவதைக் காணமுடிகிறது. நெல்லை தாமிரவருணியில் கொரோனவால் மக்கள் கூட்டமின்றி, ஆற்று நீர் சுத்தமாக ஓடுகிறதாம்.
இந்த நிலையில் மதுரைக்கு வரும் வைகை நதியோ, மதுரை மாவட்டத்துக்குள் வருவதற்குள் , மதுரையில் பல இடங்களில் ஆற்றின் கரையோரங்களில் கலக்கும் கழிவு நீரையும் , வேகவதி நதி சுமந்து செல்கிறது என்கிறார்கள் மக்கள்.

மதுரையை பொறுத்தவரை, கழிவுநீரானது, கோரிப்பாளையம், செல்லூர், குருவிகாரன் சாலை, தெப்பக்குளம், சிலைமான், மணலூர், சோழவந்தான், தேனூர், மண்னாடி மங்கலம், குருவித்துறை உள்ளிட்ட பல ஊர்களில் கழிவுநீரை ஊரை விட்டு வாய்க்கால் மூலம் கடத்தாமல், வைகை நதியில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் வைகை ஆற்றில் குடிநீர் கிணறுகள் அருகே கழிவுநீரும் கலக்கப்படுவதால், குடிநீர் ஊற்றுகளும் பாதிக்கப்படலாம் என பல சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை செல்லூர், கோரிப்பாளையம், குருவிக்காரன் சாலை பகுதிகளில் கழிவு வாய்க்காலே, ஆற்று பகுதி வரை செல்வதால், ஆற்றின் நடுப்பகுதியில் கழிவுநீர் நீச்சல் குளம் போல தேங்கியுள்ளது. கோடையின் வறட்சியின் காரணமாக, மதுரை செல்லூர் பகுதியில் மேய்சலுக்கு வரும் கால்நடைகள் யாவும் ஆற்றில் உள்ள காய்ந்த புற்களை மேய்ந்து விட்டு, தேங்கியுள்ள கழிவு நீரையும் குடித்து விட்டு செல்லும் நிலைதான் தொடர்கிறது.
ஆகவே, சம்மந்தப்பட்ட துறையினர், வைகை ஆற்றில் கலக்கும் நீரை கடத்தி,வறண்ட நிலப்பரப்பில் பாயும்படி செய்தால், வைகை நதியில் மாசுபடுதலை கட்டுபடுத்தலாம் என்கின்றனர் அப் பகுதி மக்கள்.
- செய்திக் கட்டுரை: ரவிச்சந்திரன், மதுரை