
மதுரையில் சிறிய நகைக்கடைகள் திறந்திருந்தும் பொருட்களை வாங்க பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.
மதுரை அண்ணாநகர் பகுதியில் கடை திறந்தும் வெறிச்சோடி உள்ளது. மதுரை மாவட்டத்தில் சிறிய அளவிலான நகைக்கடைகள் திறந்தாலும், வெள்ளி மற்றும் தங்க நகைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் குறைந்துள்ளது.
மதுரை நகரில் அண்ணாநகர், கேகே.நகர், நகைக் கடை பஜார், கீழ ஆவணி மூல வீதி, விளக்குத்தூண் மற்றும் சோழவந்தான், பேரையூர், கல்லுப்பட்டி, மேலூர் ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலான நகைக் கடைகளை காலை பத்துமணிக்கு, நகைக் கடையின் உரிமையாளர்கள் திறந்து வைக்கின்றனர். பெரும்பாலான நகைக் கடைகளில், எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறவில்லை.
சிலர் மட்டும் கொலுசு, தோடு ரிப்பேருக்காகவும் மட்டும் வருகின்றனர். புதிய நகைகளை வாங்கவோ, செய்யவோ வருவோரின் எண்ணிக்கையானது, மிக, மிக குறைவுதான்.
இது குறித்து மதுரை அண்ணாநகரில் கடை வைத்திருக்கும் முருகப்பன் கூறியது.. கொரோனா ஊரடங்கால் நகைக் கடைகள் மட்டுமில்லாமல், நகைகள் செய்யும் தொழிலாளிகளும் கடந்த 60 நாட்களாக தவித்து வருகின்றனர். நாங்கள் கடையை திறந்து வைப்பதால், விற்பனை இல்லையென்றாலும், பழைய பாக்கிகள் வசூலானால், மின்சாரக் கட்டணம், பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாவது கொடுப்போம் என்றார்.
பஸ் வசதி ஏற்படுவதுடன், மக்கள் மத்தியில் மீண்டும் பணப்புழக்கம் ஏற்பட்டால் தான், நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்க வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்றார் அவர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை