மதுரையில் போலீஸ்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது!

உள்ளூர் செய்திகள் மதுரை லைஃப் ஸ்டைல்
petrol bomb
petrol bomb

மதுரையில் போலீஸ்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு… இளைஞர் ஒருவர் கைது!

மதுரை அண்ணாநகர் அடுத்த மேலமடை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சலீம் மகன் ஷாஜகான் (வயது 22). இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஷாஜகான் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக மதுரை வந்திருந்தார். அப்போது மேலமடை பகுதியில் பெண் ஒருவரிடம் மர்ம கும்பல் செயின் அறுப்பில் ஈடுபட்டு உள்ளது. எனவே ஷாஜகான் நேரடியாக அந்த பகுதிக்கு சென்று தட்டி கேட்டார். அப்போது அங்கு இருந்த அன்புசெல்வன் உள்பட 3 பேர் கும்பலுடன் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து ஷாஜகான் இதுதொடர்பாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புசெல்வன் உள்பட மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர், “நண்பர் அன்புசெல்வன் சிறைக்கு செல்ல ஷாஜகானே காரணம்” என்று கருதினர். இதனால் ஷாஜகானை பழிவாங்க வேண்டும் என்று முருகனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவர் நேற்று நள்ளிரவு ஷாஜகான் வீட்டுக்கு சென்று உள்ளார்.

அப்போது மதுப் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து வீட்டின் மீது எறிந்தார். இதனால் அந்த பகுதியில் சப்தம் கேட்டது. எனவே ஷாஜகான் குடும்பத்தினர் கதவை திறந்து வெளியில் வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் அழைப்பு மணி மீது பெட்ரோல் பாட்டில் உடைந்து சிதறி, அந்த பகுதியில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. எனவே பதட்டம் அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக ஷாஜகான் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷாஜகான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியதாக, முருகன் என்பவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை போலீஸ்காரர் வீட்டில் பாட்டில் குண்டு வீசப்பட்ட சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.