
மதுரை எல்லையில் இ – பாஸ் இல்லாமல் வந்த தனியார் பேருந்தை அதிகாரிகள் சிறைபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே 4 வழி சாலையில், போலீசாருடன் இணைந்து வருவாய்த்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு ஈடுபட்டு வரும் நிலையில், இன்று காலை சென்னை தாம்பரத்தில் இருந்து, 28 பயணிகளுடன் மதுரைக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்து, இ – பாஸ் இல்லாமல் வந்ததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் நாடு முழுவதும், பலர் பலியாகிவரும் நிலையில், சென்னையில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளதால், சென்னையில் வசிக்கும் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதேபோல் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 28 பயணிகள் நேற்று இரவு சென்னை தாம்பரத்தில் தனியார் சொகுசு பேருந்தில் ரூபாய் 2500 பணம் அளித்து மதுரைக்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து, பேருந்து ஓட்டுனரிடம் இ – பாஸ் இல்லாமல் இவர்கள் பயணம் செய்ததால் இன்று காலை கொட்டாம்பட்டி அருகே உள்ள சோதனை சாவடியில் பேருந்து பரிசோதனை செய்யப்பட்ட போது ஆவணமின்றி வந்த காரணத்தால் பேருந்தினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதில் பயணம் செய்த 28 பயணிகளும் மேலூர் அருகே உள்ள கொட்டகுடியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கொரோனா சிகிச்சை பரிசோதனை என்பது நடத்தப்பட இருக்கிறது.
சிகிச்சையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டபின்னரே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என வட்டாட்சியர் சிவராமன் தகவல் தெரிவித்துள்ளார்.