
சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை, தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறியுள்ளது. கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மூலமும் , பல்வேறு வங்கிகளின் டிபிட், கிரெடிட் கார்டுகள் மூலமும் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தி வருகின்றனர்.
இதில் ஒரு சிலர் நூதன முறையில் பணமோசடி செய்திடும் சம்பவங்களும் ஒரு சில இடங்களில் அரங்கேறி வருவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கோவையில் ரத்தினபுரி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த இளைஞர் செல்வ விஷ்ணு என்பவர் ,
கடந்த சில தினங்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல செல்போன் கடைக்கு சென்று, 5000 ரூபாய் மதிப்புள்ள ஹோம் தியேட்டர் மற்றும் ஸ்பீக்கர் உள்பட சில பொருட்களை வாங்கியுள்ளார்.
பின்னர் அதற்குரிய தொகையை கூகுள் பே மூலம் செலுத்திய செல்வ விஷ்ணு, பணம் செலுத்தியதற்கான ரசீதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கடை உரிமையாளரிடம் காட்டி விட்டு பொருட்களை எடுத்து சென்றுள்ளார்.
இந் நிலையில் இதே கடைக்கு மீண்டும் சென்ற செல்வவிஷ்ணு, இம்முறை 50ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் வழக்கம் போல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி விட்டதாகவும் தெரிவித்து வழக்கம் போல் ஸ்கிரீன்சாட்டை காட்டியுள்ளார்.
ஆனால் செல்போனுக்குரிய பணம் கடையின் வங்கி கணக்கு வராததால் குழப்பமடைந்த கடை ஊழியர் செல்வ விஷ்ணுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே அக்கடையின் மற்றொரு கிளையிலும் சிறிது நேரத்திற்கு முன்பு இதே போன்ற பிரச்னை ஏற்பட்டதை உறுதி செய்துகொண்ட கடை ஊழியர்கள் , சந்தேகத்தின் பெயரில் காட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞர் செல்வ விஷ்ணுவிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே மற்றொரு கடையில் 8000 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கியதற்கான ரசீதில் திருத்தம் செய்து, நூதன பணமோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து செல்வ விஷ்ணுவை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், இதே பாணியில் பல்வேறு கடைகளிலும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், செல்வ விஷ்ணுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.