நீட் தேர்வை எதிர்த்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மாநில பாடத்திட்டத்தில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் செந்துரையை அடுத்த குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மாணவியின் தந்தை கூலித் தொழிலாளி. திருச்சி காந்தி சந்தையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்தார். அனிதாவுக்கு மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும் என்பது வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. அனிதா 196.5 கட்டாஃப் மதிப்பெண் பெற்றிருந்தார். நீட் தேர்வில் 720 க்கு 86 மதிப்பெண் எடுத்ததால் மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை. இதனால் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் வழக்கு தொடுத்தனர். அவர்களில் மாணவி அனிதாவும் ஒருவர்.
ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடந்ததால், மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத மாணவி அனிதா விரக்தி அடைந்தார். தன் கனவு தகர்ந்து போனதாகக் கூறிய அவர், அக்ரி படிப்பை படிக்க இருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், திடீரென அவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதால் அனிதா மன உளைச்சலில் இருந்தார் என்றும், அனிதாவின் மரணம் அவரது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, மாணவி அனிதா தற்கொலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபட கூடாது என்று கூறினார்.
ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கூறுகையில், அனிதாவின் தற்கொலையை நினைவில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறுகையில், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய – மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். அனிதாவின் மரணம் தற்கொலை அல்ல. நீட் விலக்குக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டார் என்று கூறியுள்ளார்.


