
கோயம்பேடு அருகே பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர்களின் இருசக்கர வாகனம் மீது இன்று அதிகாலை சொகுசு கார் மீது மோதியது. இந்த விபத்தில் ஆயுதப்படை காவலர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (32) இவருடைய நண்பர் உடுமலைப்பேட்டை சேர்ந்த கார்த்தி (34), பரங்கிமலை ஆயுதப்படை காவலர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் பட்டாலியனிலிருந்து ஆயுப்படைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் ஆவடி சிவசக்தி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலைய பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

திருமங்கலம் கலெக்டர் நகர் சிக்னல் அருகே வந்தபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், காவலர் ரவீசந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கார்த்திக் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று பிற்பகலில் சிகிச்சை பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவீசந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து ஏற்படுத்திய அம்ரத்(25) என்பவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் காரில் 4 கல்லூரி மாணவர்கள் வந்துள்ளனர். இவர்கள் சென்னை கே.கே.நகரில் உள்ள தனது நண்பர் ரோகித் சூர்யாவின் பிறந்தநாள் விழா கொண்டாடிவிட்டு நொளம்பூரில் உள்ள வருண் சேகர் வீட்டுக்கு வேகமாக சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.