
மொத்தம் 18 சிறுமிகளை, காப்பகத்தில் இருந்து பாலியல் தொல்லை தந்ததாக வந்த தகவலை அடுத்து போலீசார் மீட்டுள்ளனர். இதையடுத்து காப்பகத்தின் டைரக்டரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
சென்னை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரில் ஒரு சிறார் காப்பகம் உள்ளது.. “தனியார் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு” என்ற பெயரில் இது இயங்கி வருகிறது. இதன் கல்யாண சுந்தரம் என்பவர்தான் பொறுப்பு. அவர்தான் டைரக்டர்.
இந்நிலையில், சைல்டு ஹெல்ப்லைன் எண்ணிற்கு இந்த காப்பகத்தில் இருந்து சிறுமி ஒருத்தி போன் செய்துள்ளார்.. அதில், காப்பகத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ந்த டிசிபிஓ, சிடபிள்யூசி உறுப்பினர்கள், எஸ்ஜேபியு, எம்கேபி நகர் மகளிர் போலீசார், மற்றும் சைல்டு லைனை சேர்ந்த அதிகாரிகள் என மொத்த பேரும் கிளம்பி அந்த காப்பகத்துக்கு சென்றனர்.
அங்கு தங்கியிருந்த 18 சிறுமிகளிடமும் நேரடியாக விசாரணை நடத்தினர். அப்போதுதான், பாலியல் கொடுமை நடந்து வந்தது உண்மை என தெரியவந்தது. பிறகு அங்கிருந்த 18 சிறுமிகளையும் உடனடியாக மீட்டனர். இதில், மீட்கப்பட்டவர்களில் 9 வயது குழந்தைகளும் அடக்கம். அவர்களில் சிலர் அந்த காப்பகத்தில் இருந்து சமீபத்தில் தப்பியோடிய ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சிறுமிகள் எல்லாருமே ஏழை பெண்கள். பெற்றோரை இழந்தவர்கள். ஆதரவற்றவர்கள். சிலருக்கு பெற்றோர் இருந்தாலும், சாப்பாடு போட முடியாத நிலைமை இருந்ததால், இந்த காப்பத்தில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமிகளில் 2 பேர் காலேஜ் படித்து வருகிறார்களாம். சிலர் 10 மற்றும் 12ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இப்போதைக்கு மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் தற்காலிகமாக சேத்துப்பட்டில் உள்ள தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த காப்பகம் முறையாக ரிஜிஸ்தர் செய்யப்படாமலேயே இயங்கி வந்திருக்கிறது.
தற்போது காப்பகத்துக்கு சீல் வைத்துவிட்டனர். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த கல்யாண சுந்தரத்தை காணவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சிறுமிகளிடம் எந்த மாதிரியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோல வேறு எங்காவது உரிமம் இல்லாமல் காப்பகம் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.