திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் வற்றுவதில்லை.
இந்நதியை வருணனின் மகனான தமிழ் முனிவன் அகஸ்தியர் உண்டாக்கியது ஒரு காரணம் என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலகாரணம் என்கிறார்கள்.
ஆம் ! நெல்லையப்பர் கோயிலின் அமைப்பை பார்த்தால் இவ்விஷயம் புலப்படும்.
பொதுவாக கோயில்களில் சுவாமி அபிஷேக தீர்த்தம் வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகம் அமைக்கபட்டு இருக்கும்.
அதாவது சுவாமி சன்னதியின் வடபுறமுள்ள சண்டிகேஸ்வரர் சந்நிதியை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், நெல்லையப்பர் கோயிலில் நெல்லையப்பருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அபிஷேக நீர் வெளியே வரும் கோமுகம் நெல்லையப்பருக்கு நேர் பின்புறம் வருணனின் திசையான மேற்கு திசையில் விழும்படியாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புனிதமான அபிஷேக நீர்,மேற்கு திசையின் காவலரான வருண பகவானுக்கு உரிய மேற்கு திசையில் விழுவதால் மழையை பொழிவிக்கும் வருணபகவான் மகிழ்ந்து எப்போதும் இப்பகுதியில் மழையை பொழிவித்து, தாமிரபரணியில் தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது தேவ ரகசியம்.
மேலும் இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை வடிவில் இருக்கிறாள்.
சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாக எடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர்.
தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்.
இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு.
அம்பிகை சன்னதி முன்பாக கங்கை, யமுனை இருவரையும் துவாரபாலகிகளாகவும் காணலாம்.
கங்கையும், யமுனையும் தாமிரபரணி நகர் நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.