
கோவையில் ரவுடி ஒருவர் மதுபோதையில் பட்டா கத்தியுடன் பக்கத்து வீட்டில் வசிப்பர்களை தாக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிங்காநல்லூர் அடுத்த மசகாளிபாளையம் முல்லை நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். பிரபல ரவுடி என கூறப்படும் இவர், அந்த பகுதியில் அவ்வப்போது மதுபோதையில் பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்து, அங்கிருக்கும் வாகனங்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அவரது அடாவடி செயல்களால் அந்த பகுதி மக்கள் தொல்லைபட்டு வந்த நிலையில், ரவுடி மணிகண்டனை தட்டிக்கேட்க முடிவு செய்துள்ளனர்.
நேற்று காலை மணிகண்டனின் வீட்டுக்கு எதிரே உள்ளவர்கள், அவரது அராஜகத்தை தட்டிக்கேட்டு உள்ளனர்.
அப்போது, கற்களை கொண்டு கேட்டை உடைத்து மணிகண்டன் தாக்க முயற்சித்தார். மேலும், அதனை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் போலீசுக்கு தகவல் அளிப்பதாக எச்சரித்த நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன் பட்டாக் கத்தியை கொண்டு, அந்த இளைஞரின் வீட்டிற்கே சென்று தாக்க முற்பட்டார்.
மேலும், அவரது வீட்டின் கேட்டை ஏறி குதிக்க முயன்றபோது, அங்கிருந்த பெண் எச்சரித்ததால் அந்த முயற்சியை கைவிட்டு உள்ளார். தொடர்ந்து, தெருவில் நின்று தகராறில் ஈடுபட்டதால், பயத்தில் பலரும் வீடுகளுக்குள் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற சிங்காநல்லூர் போலீசார், மணிகண்டனை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 1 வாரமாக அவரது தாயாரை அடித்து துன்புறுத்தியதும், அதன் காரணமாகவே தெருவில் உள்ளவர்களுடன் தகராறு செய்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து, போலீசார் அவரை நீலாம்பூர் பகுதியில் உள்ள மனநல மருத்துவமமைனக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே மணிகண்டன் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.