
சேலத்தில் கொரோனா பாதிப்பானது அதிகமாகி வருவதால், அரசு பல கட்ட முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் பொதுமக்கள் சிலர் அலட்சியமாகச் சுற்றித் திரிவதால் தொடர்ந்து நோயின் தீவிரம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
இதற்காக அரசு அதிகாரிகள் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய வண்ணம் உள்ளனர்.
மேலும், வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் விதிமுறையை மீறி வெளியே வந்த நபர்களுக்குக் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
அதேபோல் சேலம் கிச்சிப்பாளையம் காந்திமகான் தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கப் பொதுமக்கள் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமனித இடைவெளி இல்லாமல் கூடி நிற்பதாகப் புகார்கள் குவிந்தது.
தனிமனித இடைவெளியை உறுதி செய்யச் சொல்லிக் குறிப்பிட்ட ரேஷன் கடை ஊழியர்கள் பலமுறை அறிவுறுத்தியும் எந்த பலனும் இல்லை. இதையடுத்து மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரேஷன் கடைக்கு வந்துள்ள அனைவரும் கட்டாயம் கொரானா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் பரிசோதனை செய்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்களை அழைத்து மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கை காரணமாக ரேஷனுக்கு பொருட்களை வாங்க வந்த மக்கள் பொருட்களை வாங்காமல் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் சிலர் பரிசோதனை செய்துகொண்டு பொருட்களைப் பெற்றுச் சென்றனர்.