
போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை நடைமுறைக்கு வந்தது. தேனியில் இருந்து போடிநாயக்கனூர் வரை 15 கி.மீ., துாரத்திற்கு நடத்தப்பட்ட அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து, ரயில்பாதை முழுமையாக இயக்கப்பட்டது. முன்னதாக மதுரை – தேனி வழித்தடங்கள் முடிக்கப்பட்டு மதுரை – தேனி சேவையும் தொடங்கப்பட்டது.
உயர்மட்ட முடிவு எடுக்கப்பட்டவுடன், இந்த சேவை போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்படும். மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரையிலான 90 கி.மீ அகல ரயில் பாதை திட்டம் ரூ.592 கோடியில் முடிக்கப்பட்டது. புதிய ரயில் பாதையில் 8 பெரிய பாலங்களும், 184 சிறிய பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை காலை, ரயில்வே பாதுகாப்பு ஆணையம் (சிஆர்எஸ்) பாதுகாப்பு அதிகாரி அபய் குமார் ராய் வழித்தடத்தில்
ஆய்வு மேற்கொண்டார். தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு முதன்மை செயல் அலுவலர் வி.கே.குப்தா மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர். சோதனை ஓட்டத்தில், மூன்று பெட்டிகளுடன் 120 கி.மீ., வேகத்தில் 9 நிமிடங்களில் போடிநாயக்கனூரில் இருந்து தேனியை அடைந்தார்.





