மக்களைக் காக்கும் முக்கிய முடிவு எடுப்பதாகக் கூறியிருந்த டி.ராஜேந்தர், இன்று மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் டி.ராஜேந்தர். அவரது ‘லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற கட்சிப் பலகையை இன்று மீண்டும் திறந்து வைத்தார்.
டி.ராஜேந்தர் இன்று ஒரு முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, அவர் இன்று மீண்டும் அரசியலில் காலடி பதித்துள்ளார். அவரது செய்தியாளர் சந்திப்பின் போது முதலில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினார். பின், ஏற்கனவே ஆரம்பித்த ‘லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்’ கட்சியின் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதன்மூலம் அவர் மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ளார். கட்சியின் பெயர் பலகையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றுள்ளது.
அப்போது அவர் பேசியது… “தமிழக அரசியலில் இப்போது தலைவர் எம்.ஜி.ஆர் இல்லை, தலைவி ஜெயலலிதா இல்லை. தி.மு.கவின் தலைவர் கருணாநிதியும் உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் ஈடுபடவில்லை. இவ்வாறு அரசியலில் யாரும் இல்லாததால் சிலர் மூத்த தலைவர்களிடம் ஆசி பெற்று கட்சி தொடங்கியுள்ளனர்” என்று பேசினார்.