சென்னை:
ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தால் எனக்கு ரூ2.72 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது, எனக்கு தயாரிப்பாளர் தாணு திருப்பித் தருவதாக உறுதியளித்த ரூ.1.50 கோடி பணத்தை அவர் திருப்பித் தரவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறுவழி இல்லை என்று விநியோகஸ்தர் ஜி.பி.செல்வகுமார் செய்தியாளர்கள் முன்னர் கதறினார்.
இது குறித்து அவர் கூறியபோது,தென்னாற்காடு, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கான கபாலி பட உரிமையை ரூ. 6 கோடிக்கு வாங்கினேன். இதில் எனக்கு நஷ்டம் ரூ2.72 கோடி. இதனால் நான் முன் பணமாகக் கொடுத்த ரூ1.50 கோடியை தயாரிப்பாளர் தாணு எனக்குத் திருப்பித் தருவதாகக் கூறினார். நான் 20 மாதங்களாக தாணுவின் பேச்சை நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்குக் கடன் கொடுத்தவர்கள் யாரும் அதை நம்பவில்லை. அதற்குள் கடன்காரர்கள் நான் சோற்றுக்கே வழி இல்லாமல் திண்டாடுவதாகவும் ரஜினிகாந்த் தலையிடுவாரா? எனவும் கேட்டு போஸ்டர் ஒட்டிவிட்டனர்.
அதனால்தான் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துகிறேன். என் மனைவியின் தாலியையும் கூட அடகு வைத்துவிட்டேன். கடன்காரர்கள் என் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள். அவர்கள் வைப்பதற்கு முன்பாக நானே தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. கபாலி படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்பனை செய்யப்பட்ட பின் பணம் தருவதாக தாணு கூறினார். இப்போது டிவி சேனலிலேயே கபாலி படத்தை ஒளிபரப்பியும் விட்டார்கள். ஆனால் எனக்கு பணம் மட்டும் வரவில்லை. அதனால் நான் சொல்வதை கடன்காரர்கள் நம்ப மறுக்கின்றார்கள்.
தாணு எனக்கு பணத்தை கொடுத்துவிட்டால் கடன்காரர்களுக்கு செட்டில் செய்துவிடுவேன். அதன் பிறகு ஊரை விட்டே ஓடி விடுகிறேன். ரஜினிகாந்த் மற்றும் தாணுவிடம் கையெடுத்து கெஞ்சிக் கேட்கிறேன். எனக்கு பணத்தை செட்டில் செய்து கடன்காரர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என வேண்டுகிறேன். நான் போன வாரமே சாக வேண்டியது. என் உடல்நிலை மோசமாக உள்ளது. இதற்கு தீர்வு காணா விட்டால் தற்கொலைதான் செய்து கொள்வேன்.
இது தொடர்பாக ரஜினியிடம் விளக்கம் தர இருக்கிறேன். என் மரணம் செயற்கையானதுதான் எனில் அது நடக்கட்டும். அந்த அளவுக்கு தாணு என்னை விடமாட்டார் என நம்புகிறேன். அதனால் போலீசில் புகார் கொடுக்கவில்லை என்று கூறினார் ஜி.பி. செல்வகுமார்.