திருவனந்தபுரம்:
திறந்த வெளியில் தாய்ப்பால் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? என்று கூறி, மலையாள இதழ் க்ரிஹலக்ஷ்மி மார்ச் மாத இதழில் ஒரு பிரசார இயக்கத்தை மேற்கொண்டது. அதற்காக ஜிலு ஜோசப் என்ற எழுத்தாளர் மாடலாக போஸ் கொடுத்தார். இது இணையதளத்தில் இரு வேறு கருத்துகளை விதைத்து இணையத்தையே இரு கூறாக்கியது. இதழும் எழுத்தாளரும் செய்தது சரி என்று ஒரு சாராரும், இது தவறான முன்னுதாரணம் என்று ஒரு சாராரும் மல்லுக்கு நின்றனர். இப்போது எழுத்தாளர், மற்றும் இதழ் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
க்ரிஹலக்ஷ்மி என்னும் மலையாள வார இதழ், பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை அட்டைப் படமாக வெளியிட்டு, விழிப்பு உணர்வைத் தூண்டும் வகையில் ஒரு பிரசார இயக்கத்தை தொடங்கியுள்ளது. அந்த அட்டைப்படத்தில் இதற்காக மாடலாக இருந்து குழந்தைக்கு பாலூட்டும் விதத்தில் போஸ் கொடுத்துள்ளார் மலையாள எழுத்தாளர் ஜிலு ஜோசப்.
“பெண்களே… தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைக் கேரளாவில் பறைசாற்றுங்கள். தாய்ப்பால் கொடுப்பதை வித்தியாசமாகப் பார்க்க வேண்டாம்…” என்று அந்த அட்டைப்படத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. க்ரிஹலக்ஷ்மி வார இதழின் இந்த அட்டைப்பட விளம்பரத்துக்கு ஆதரவும் எதிர்ப்புமாக இரு வேறு விமர்சனங்கள் இணையத்தில் கிடைத்துள்ளன. சமூக வலைதளங்களில் இரு வேறு கூறாக்கி கருத்துகளைப் பரப்பிவருகின்றனர் பலர். ‘இது ஒரு துணிச்சலான முயற்சி’ என்று ஒரு சாரரும், ‘இது விளம்பரத்துக்காகச் செய்த தேவையில்லாத முயற்சி’ என்று ஒரு தரப்பும் விமர்சித்துள்ளனர்.
மலையாள எழுத்தாளர் இந்து மேனன், இது குறித்துக் கூறிய போது, “இளம் பெண்கள், தங்களின் மார்பகங்களை அவமானகரமானதாக உணர்வதும், தாழ்வு மனப்பான்மையை வளர்ப்பதும் தவறு. அதே மார்பகம்தான் உயிரின் துவக்கத்தில் உலகின் பசியைப் போக்கி, அந்தப் பெண்ணை உலகின் தேவதையாக உணர வைக்கிறது” என்று கூறியுள்ளார். இவர், இந்த இதழின் தாய்ப்பால் கொடுக்கும் பிரசாரத்தில் இணைந்துள்ளார். இந்த பிரசார இயக்கம் வரும் உலக மகளிர் தினத்துக்காகத் துவங்கப் பட்டுள்ளது.
இந்த இதழில் இரு பெண்கள் (ஒருவர் எழுத்தாளரான மாடல்) குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போல் படத்தை வெளியிட்டு, அதன் கீழே தாய்மார்கள் கூறியுள்ள குறிப்புகள், கருத்துகளை வெளியிட்டுள்ளது.
இந்த பிரசார இயக்கத்துக்கான கருத்துருவாக்கம் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் அந்த இதழ் கூறியுள்ளது. கடந்த ஜனவரியில் மருத்துவமனையில், பொதுவெளியில் தனது குழந்தைக்கு மார்பகத்தைத் திறந்த நிலையில் 23 வயது இளம்பெண் அம்ரிதா தாய்ப் பால் கொடுத்ததையும், அதனை அவரது கணவர் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டு, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தைக் குறிப்பிட்டதையும், அதன் விளைவாக பேஸ்புக்கில் வந்த பின்னூட்டங்களை கவனித்ததாகவும், அதன் காரணமாகவே இந்தப் பிரசார இயக்கத்தை தொடங்க ஓர் உத்வேகம் கிடைத்ததாகவும் அந்த இதழ் தெரிவித்துள்ளது.
“Don’t stare, we are #breastfeeding!”
Grihalakshmi March 1st Issue is out, which speaks about the importance of breastfeeding, and the taboos revolving around it. pic.twitter.com/CtobpNInMO
— Grihalakshmi (@Grihalakshmi_) March 1, 2018
இந்த இதழில், அந்தப் பெண் அம்ரிதாவும் தன் அனுபவத்தை பேட்டியாக அளித்துள்ளார். இது இப்போது கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, விவாதப் பொருளாக்கியுள்ளது.
இருப்பினும், க்ரிஹலக்ஷ்மி பத்திரிகைக்கு எதிராக வழக்கறிஞர் வினோத் மேத்யூ என்பவர் கேரளாவின் கொல்லம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பத்திரிகையின் பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஜிலு ஜோசப்புக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மார்ச் 16 ந்தேதி விசாரணைக்கு வருகிறது.