திண்டுக்கல்:
தமிழை சனியன் என்று சொன்னவர் ஈ.வே.ரா. என்றும், அதற்கான ஆதாரம் என்னிடமுள்ளது என்றும் கூறியுள்ளார் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா.
அண்மையில் திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, பாஜக., தேசியச் செயலாளர் ஹெச். ராஜா பேஸ்புக்கில் தெரிவித்த கருத்து ஊடகங்களால் சர்ச்சை ஆக்கப் பட்டது. இதை அடுத்து சமூக அமைதி கருதி தனது கருத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்கினார் ஹெச்.ராஜா. அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என்று கூறியிருந்தார். அவரது கருத்தை செய்தி ஊடகங்கள் கடும் சர்ச்சை ஆக்கின. இதை அடுத்து ஹெச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் போராட்டங்களை நடத்தின.
இந்நிலையில் தாற்காலிகமாக ஈ.வே.ரா. பெரியார் குறித்து பேசாமல் வாய் மூடி இருந்த ஹெச்.ராஜா, இன்று மீண்டும் ஈ.வே.ரா. பெரியார் குறித்து பேசியுள்ளார். அதுவும் சர்ச்சை ஆக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டதுதான் திராவிடம். தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்று ஈ.வே.ரா பெரியார் பேசியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்து சொல்வதால்தான் என்னை வசை பாடுகிறார்கள்” என்று கூறினார்.
முன்னதாக, தனது கருத்து பேஸ்புக்கில் அட்மினால் பதிவு செய்யப் பட்டது என்றும், தான் சர்ச்சைக்குரியது என்று தெரியவந்ததும், கருத்தையும் அட்மினையும் நீக்கி விட்டதாகவும் கூறியிருந்தார் ஹெச்.ராஜா. மேலும், தனது கருத்துக்காக வருத்தமும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து ஹெச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன். கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆனால், இது அட்மின் போட்ட கருத்தல்ல, ஹெச்.ராஜா மட்டும்தான் பெரியார் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், ஈ.வே.ரா., என்று பயன்படுத்துவார், எனவே ஹெச்.ராஜா பொய் சொல்கிறார் என்று கூறியிருந்தார் மதிமுக.,பொதுச் செயலர் வைகோ.