
கோவை: காவிரி விவகாரத்தில் அதிமுக., எம்பி.,க்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், எம்பி.,க்கள் இருப்பதால்தான் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த முடிகிறது, இல்லாவிட்டால் எப்படி எதிர்ப்பைக் காட்ட முடியும் என்று கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. எனவே மத்திய அ்ரசின் கவனத்தை ஈர்க்க, தமிழக எம்.பிக்கள் மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தகார். இதை அடுத்து, கட்சிக்கென ஒற்றை எம்பி.,யாக உள்ள நான் காவிரிக்காக எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று பாமக எம்பி., அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.
இதனிடையே காவிரி விவகாரத்தில் அதிமுக., எம்பி.,க்கள் ராஜினாமா குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று கூறியிருந்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இத்தகைய பின்னணியில், இன்று கோவை விமான நிலையம் வந்திருந்த முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுஅவர் கூறியதாவது…
உச்சநீதிமன்றம் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறியுள்ளது. தில்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நமது நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம். காவிரி வழக்கில் நமது வழக்கறிஞர்கள் சிறப்பாக வாதாடினர், முழுமையாக வாதங்களை எடுத்து வைத்தோம். அரசியல் காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் வாதம் பற்றி வைகோ குறை கூறுகிறார். 13 நாட்கள் காவிரி தொடர்பாக வாதத்தை நமது வழக்கறிஞர்கள் சிறப்பாக முன் வைத்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் தமிழகம் உறுதியாக உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அதிமுக எம்.பிக்கள் குரல் கொடுக்கிறார்கள். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக., அரசுதான்.
காவிரி விவகாரத்தில் திமுக., எதையும் செய்யவில்லை. மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியிலும், மாநிலத்தில் தங்கள் ஆட்சியும் இருந்தபோது, அதை பயன்படுத்தி காவிரி விவகாரத்தில் திமுக., தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இப்போது அதிமுக எம்.பிக்களை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்துவது அரசியலுக்காகத்தான். அதிகாரம் உள்ளபோதுதான், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நன்மை செய்ய முடியும், இல்லாத போது செய்ய முடியாது. நமக்கு எம்.பிக்கள் இருப்பதால்தான் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த முடிகிறது. ராஜினாமா செய்வதால் பலன் இல்லை – என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
முன்னதாக, காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியமே தீர்வு என்று தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் “திட்டம்’ எனக் குறிப்பிடுவது காவிரி மேலாண்மை வாரியத்தைத்தான் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.
“உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் திட்டம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூறவில்லை” என்று மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங் கூறியிருந்தார். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசு தனது கருத்தைத் தெளிவு படுத்தியுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தலைமையில் தில்லியில் 4 மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்று, அரசின் நிலைப்பாட்டை எடுத்து வைத்தனர். அதைத் தொடர்ந்து, சென்னை திரும்பியதும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சனிக்கிழமை சந்தித்தனர். தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் குறித்தும், மத்திய அரசின் கருத்து குறித்தும் முதல்வரிடம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விளக்கினார்.
முன்னதாக, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிப்.16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதில், தமிழகத்துக்கான காவிரி நீரை 14.75 டிஎம்சி குறைத்து தீர்ப்பளித்த அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் எனவும் கூறியது.
இது தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதற்காக பிரதமரிடம் நேரம் கேட்டு, தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு, முதலில் நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திக்குமாறு மத்திய அரசிடம் இருந்து பதில் வந்தது. அதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் 4 மாநிலத் தலைமைச் செயலர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதையேற்று, தமிழக அரசும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்டுள்ள கருத்துகள் குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. அதைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் சனிக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது.




sarithan