
செங்கோட்டை: நெல்லை மாவட்டத்தில் அனேக இடங்களில் ஒரு வார காலமாக நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய குற்றாலம், செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இன்று காலை மேகமூட்டமாக இருந்த நிலையில் பகல் நேரத்தில் மழை பிடித்துக் கொண்டது. மாலை கன மழை கொட்டித் தீர்த்தது.
இந்த நிலையில் மழை நீர் வீணாவதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து, அணைக் கட்டுகள், குளங்கள் வேகமாக நிரம்பி வரும் வேளையில், பல குளங்களில் மீன் பிடிப்பதற்காக குளங்களில் உள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர்.
இயற்கை கொடுக்கும் போது நீரைப் பாதுகாத்து சேமித்து வைக்காமல், வறட்சி வறட்சி என்று புலம்பிக் கொண்டே இருந்து என்ன பயன் என்கின்றனர் பொதுமக்கள். மேலும், விவசாயத்தைக் காப்பது அனைவரின் கடமை என்று கூறும் பலரும், ஒரு சில இடங்களில் குளத்தை குத்தகைக்கு எடுத்த நபர்கள் பண பலத்தால் தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை மிரட்டி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தகுந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவ்வாறு பெய்யும் நீரை குளங்களில் பாதுகாத்து சேமிக்க முடியும். நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?