
கொல்லத்திலிருந்து செங்கோட்டை வழியாக தாம்பரம் செல்லும் சிறப்பு ரயிலுக்கு செங்கோட்டை வர்த்தக சங்கம் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செங்கோட்டை –புனலூர் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் கடந்த 2010ஆம் ஆண்டு செப்-20ஆம் தேதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் மூன்றாண்டுகளுக்கு பின்னர் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விரைந்து முடிக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் புனலூர் முதல் எடமன் வரையில் 20கி.மீ தூரமும் செங்கோட்டை முதல் நியூஆரியங்காவு இடையே 20.3கி.மீ தூரமும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மீதமுள்ள பகுதியான நியூஆரியங்காவு முதல் எடமன் வரையிலான சுமார் 10.5கி.மீட்டர் தூரத்திற்கான பணிகளும் அக்டோபர் மாதம் நிறைவு செய்யப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சான்றும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் உறுதியாக ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார். (வண்டி எண் 06027) முன்னோட்டமாக இன்று இருமாநிலங்களும் எதிர்பார்த்த செங்கோட்டை—புனலூர் அகல ரயில் பாதையில் தாம்பரம்-கொல்லம் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
நேற்று மாலை 5 மணிக்கு தாம்பரதிலிருந்து புறப்பட்டு இன்று காலை 10.30 மணிக்கு கொல்லம் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் இன்று மாலை 4.50க்கு செங்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
செங்கோட்டை வர்த்தக சங்க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர வர்த்தக சங்க தலைவர் ரஹீம் தலைமை தாங்கினார். செயலாளர் சதீஷ், ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் சுந்தரம், நாராயணன், முருகேசன், அக்ரி சேக்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து வர்த்தக சங்கம் சார்பில் ரயில் ஓட்டுநர்களுக்கும், சிறப்பு ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும் வர்த்தக சங்க நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கினர்.



