சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டியை காண வருபவர்கள் செல்போன், லேப்டாப், கேமரா, பேனர்கள், கொடிகள், பட்டாசுகள் கொண்டு வரக்கூடாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கும், வீரர்கள் தங்கியுள்ள விடுதிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தப் போராட்டங்கள் எல்லாம், ஐ.பி.எல். போட்டிகளை நடத்தினால், இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும் என தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சியினர் கருதுகின்றனர். எனவே, சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எதிர்ப்பை மீறி போட்டிகளை நடத்தினால், சேப்பாக்கம் மைதானத்தையும், கிரிக்கெட் வீரர்கள் தங்கும் ஓட்டல்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ஐ.பி.எல். போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று, கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி சென்னையில் நாளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற வுள்ளது. இதற்காக சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்கியுள்ள கிரவுன் பிளாசா ஹோட்டல் பகுதியிலும், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள பகுதியிலும் கூடுதல் ஆணையர் சாரங்கன் தலைமையில், சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிரிக்கெட் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காக மைதானத்திற்கு வரும் வீரர்களின் வாகனங்களுக்கு முன்னும், பின்னும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் சுற்றுச் சுவர்களில் தகரத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சேப்பாக்கம் மைதானத்தின் நுழைவாயில் பகுதிகளில் டிக்கெட் இல்லாதவர்கள் நிற்க தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர்.
அடுத்து, மைதானத்துக்குள் எந்த வித எலக்ட்ரானிக் சாதங்களும் கொண்டு செல்ல தடை விதித்துள்ள போலீஸார், பட்டாசு வெடிக்கவும் தடை விதித்துள்ளனர்.